குமுளியில் மாசுக் கட்டுப்பாட்டு விஞ்ஞானி ஆய்வு

கூடலுார் : நெல்லையில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக நேற்று தமிழக கேரள எல்லையான குமுளியில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய முதுநிலை விஞ்ஞானி கோகிலா தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கேரளாவில் இருந்து மூடை மூடையாக கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லையில் கொட்டப்பட்ட விவகாரம் பூதகரமானது. மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இதன் எதிரொலியாக எல்லைப் பகுதியில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.


இதன் அடிப்படையில் நேற்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முதுநிலை விஞ்ஞானி கோகிலா தலைமையில் தமிழகப் பகுதியில் உள்ள குமுளி போலீஸ் மற்றும் வனத்துறை சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கேரளாவிலிருந்து தமிழகப் பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பதிவேடுகளில் பதிவு செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடந்தது. வாகனங்களில் முழுமையாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவக் கழிவுகள் கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சோதனைச் சாவடி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினர். கம்பம் மெட்டு, போடி மெட்டு பகுதிகளிலும் இக்குழு ஆய்வு மேற்கொண்டது.


மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் விஸ்வநாதன், நகராட்சி கமிஷனர் கோபிநாத், தாசில்தார் சுந்தர்லால், சுகாதார ஆய்வாளர் விவேக், கூடலுார் ரேஞ்சர் முரளிதரன் உடன் இருந்தனர்.

Advertisement