ராமேஸ்வரம் கடலோர ஆராய்ச்சி மையம்; ஒழுங்குமுறை குழுமம் ஒப்புதல் தருமா?


சென்னை: ராமேஸ்வரத்தில் தேசிய கடலோர ஆராய்ச்சி மைய வளாகம் அமைக்கும் திட்ட விண்ணப்பத்தை, தமிழக கடலோர ஒழுங்குமுறை குழுமம், திருப்பி அனுப்பி உள்ளது.


தேசிய கடலியல் ஆராய்ச்சி மையமான என்.ஐ.ஓ.டி., சென்னை பள்ளிக்கரணையில் செயல்படுகிறது. அதன் தொடர்பு நிறுவனமான, தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், தனி நிர்வாக அமைப்புடன் செயல்படுகிறது.


கடலோர பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள், மாசு தொடர்பான ஆய்வுகளை, இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.


ராமேஸ்வரம், பாம்பன் கிராமத்தில், மன்னார் வளைகுடா பகுதியில் கள ஆராய்ச்சி மையம் அமைக்க, தேசிய கடலோர ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்தது.

கடலில் ஏற்படும் மாற்றங்கள், அதனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் தாக்கம் தொடர்பாக ஆராய, இந்த மையம் அமைக்கப்படுகிறது.


இதற்கு, கடலோர ஒழுங்குமுறை விதிகளின் கீழ் ஒப்புதல் பெற வேண்டும். அதற்காக, தமிழக கடலோர ஒழுங்குமுறை குழுமத்திடம், தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் விண்ணப்பித்தது. அதன் அடிப்படையில் தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


இதில் கட்டடங்கள் அமையும் இடங்கள் தொடர்பாக, சில மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை எழுந்தது. இது தொடர்பாக, விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்ய, தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் ஒப்புக் கொண்டது.


இதையடுத்து, கடலோர ஒழுங்குமுறை குழுமம், விண்ணப்பத்தை திருப்பி அனுப்பி உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement