இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர் சுரண்டியது ரூ.5,500 லட்சம் கோடி!

2

புதுடில்லி,: இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது, 1765 முதல் 1900 வரை நாட்டின் 5,500 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை எடுத்துச் சென்றதாக, மனித உரிமை அமைப்பான, 'ஆக்ஸ்பேம் இன்டர்நேஷனல்' வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக பொருளாதார அமைப்புகளில் ஒன்றான, 'வேர்ல்டு எகனாமிக் போரம்' ஆண்டுக் கூட்டம் துவங்கியுள்ளது. அதன் முதல் நாள் கூட்டம் துவங்கும் முன், 'டேக்கர்ஸ், நாட் மேக்கர்ஸ்' என்ற தலைப்பில் ஆக்ஸ்பேம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:


வரலாற்றுப் பதிவான காலனி ஆதிக்கத்தில் துவங்கிய வாரிசு அதிகாரம், சமத்துவமின்மை ஆகியவை நவீன காலத்திலும் மக்களை தொடர்ந்து பாதித்துவருகின்றன.


குளோபல் சவுத் எனப்படும் தென்பகுதி நாடுகளை வடபகுதி நாடுகள் திட்டமிட்டு தொடர்ந்து சுரண்டி வந்தது வரலாறு. பல்வேறு ஆய்வுகள், ஆராய்ச்சி கட்டுரைகள், ஆவணங்கள் அடிப்படையில் கணக்கிட்டதில், 1765 முதல் 1900 வரை, இந்தியாவில் இருந்து பிரிட்டன் சுரண்டிய சொத்துக்களின் மதிப்பு, 5,500 லட்சம் கோடி ரூபாயை தாண்டுகிறது.


இதில், 10 சதவீதத்தை பிரிட்டனின் 10 சதவீத பெரும் பணக்காரர்கள் வசமாக்கிக் கொண்டனர். பிரிட்டிஷ் கரன்சியான 50 பவுண்ட் நோட்டை பரப்பி வைத்தால், ஒட்டுமொத்த லண்டனை கவர் செய்து விடும் அளவு அது.


இந்தியாவை கிழக்கு இந்திய கம்பெனி வாயிலாக ஆட்சி செய்த பிரிட்டன், ராணுவத்துக்கு 75 சதவீதம் செலவிட்டு, பொதுப் பணிகளுக்கு வெறும் 3 சதவீதம் செலவிட்டது தெரிய வந்துள்ளது.


அதோடு, இந்தியாவின் நீர்ப்பாசன முறைகள், விவசாய உற்பத்தியை சீரழித்து, வறுமையும் வறட்சியும் ஏற்படுத்தியதன் விளைவுகள் இன்றும் தொடர்கின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement