கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து
மஹா கும்ப நகர்: உத்தர பிரதேசத்தில் மஹா கும்பமேளாவுக்காக, செக்டார் 16 பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கின்னர அகாரா முகாம் அருகே நேற்று தீ விபத்து ஏற்பட்டது. எனினும், இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
உ.பி.,யின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மஹா கும்பமேளா நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த நிகழ்வு பிப்., 26 வரை நடக்கிறது.
இதுவரை ஏழு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர். செக்டார் 19 பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமில், நேற்று முன்தினம் சிலிண்டர்கள் வெடித்ததால், தீ விபத்து ஏற்பட்டது.
இதில், ஏராளமான கூடாரங்கள் எரிந்து சாம்பலாகின. அதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏற்படவில்லை. இந்நிலையில், செக்டார் 16 பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கின்னர அகாரா முகாம் அருகே, நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீயை, அங்கிருந்த பக்தர்கள் உடனடியாக அணைத்தனர். இந்த விபத்தில், எந்த சேதமும் ஏற்படவில்லை.