வேர்க்கடலை விதைப்பண்ணையை வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு
வானூர்: தைலாபுரம் கிராமத்தில், புதிய ரக வேர்க்கடலை வி.ஆர்.ஐ -10 ரக விதைப்பண்ணையை வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
வானூர் வட்டாரத்தில் அடுத்த நிதி ஆண்டிற்கு திட்டங்களை செயல்படுத்தவும், விவசாயிகளுக்கு விநியோகம் செய்யவும் வேர்க்கடலை விதை 30 டன் தேவைப்படுகிறது.
இதற்காக தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் கார்த்திகை மாதத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் வேர்க்கடலை வி.ஆர்.ஐ -10 ரக சான்று விதைப்பண்ணை விவசாயிகளின் வயல்களில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் இருந்து 35 டன் வேர்க்கடலை விதைகள் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ.105க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதில், உற்பத்தி மானியமாக கிலோவிற்கு ரூ. 25 கூடுதலாக வழங்கப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக தைலாபுரத்தில் வேர்க்கடலை விதைப்பு செய்து 25 நாளான 10 ஏக்கர் விதைப்பண்ணையை வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் ஆய்வு செய்தார். வேர்க்கடலையில் 'ரிச்' ஊட்டச்சத்து கரைசலை தெளித்திடவும், பூச்சி மற்றும் நோய்கள் தென்படும் போது உரிய பயிர் பாதுகாப்பு மருந்துகளை தெளித்திட விவசாயிக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார், உதவி விதை அலுவலர் மோகன் குமார், உதவி வேளாண் அலுவலர் ரேகா, விவசாயி ஹரிராம் உடனிருந்தனர்.