சேதமடைந்த கிடங்கல் தரைப்பாலம் சீரமைக்க நடவடிக்கை தேவை
திண்டிவனம்: திண்டிவனத்தில் பெஞ்சல் புயலால் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் வீசிய பெஞ்சல் புயல், அதனால் ஏற்பட்ட கனமழை காரணமாக திண்டிவனம் கிடங்கல் (1) பகுதி ஏரி உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், பிரதான சாலையில் உள்ள தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டு தரைமட்டமானது.
இதனால் கிடங்கல் பகுதி மக்கள், நகரப்பகுதிக்கு மேம்பாலம் வழியாக சுற்றி செல்ல வேண்டியிருந்தது. அதனைத் தொடர்ந்து பழுதடைந்த தரைப்பாலம் தற்காலிகமாக வாகனங்கள் சென்று வரும் வகையில் மண்கொட்டி சீரமைத்து போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த தற்காலிக தரைப்பாலத்தின் இரு புறமும் தடுப்பு இல்லாததால், வாகன ஓட்டிகள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பழுதடைந்த பாலத்தை இடித்துவிட்டு, 24 அடி அகலத்தில் புதிய பாலம் கட்ட நகராட்சி சார்பில் ரூ.1.32 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டும் பணிகள் துவங்கவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, 'பாலத்தின் அருகிலுள்ள ரயில்வே மற்றும் நகராட்சி பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, பாலம் கட்டும் பணி துவங்கும்''என்று தெரிவிக்கின்றனர்.