கிரைம் பிராஞ்ச் போலீசின் 'ஈயம் பூசும் வேலை'
பொங்கல் கொண்டாட்டம் முடிந்த நிலையில், மித்ராவை பார்த்த சித்ரா, ''ஹாய் மித்து... பொங்கல் எப்படி போச்சு?'' என கேட்டாள் சித்ரா.
''ம்...ம்... சூப்பர் அக்கா. ரொம்ப என்ஜாய் பண்ணினேன். ஆனா, நொய்யல் நதிக்கரையில் நடந்த பொங்கல் விழா சொதப்பலாம்...'' ஆரம்பித்தாள் மித்ரா.
''எப்படி சொல்றே''
''நொய்யல் நதிக்கரையில், கார்ப்ரேஷனுடன் இணைந்து ஜீவநதி நொய்யல் சங்கம், ரோட்டரி ஆகியன பொங்கல் திருவிழாவை நடத்தினாங்க. 501 பொங்கல் வைக்க பிளான் பண்ணினாங்க. நிகழ்ச்சி துவங்கிய போது, 100 அடுப்புகள் காலியாக இருந்துச்சாம். இத பார்த்து 'ஷாக்' ஆன கார்ப்ரேஷன் ஆபீசர்ஸ், வேறு வழியின்றி பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் போலீசார், துாய்மைப் பணியாளர்கள் என வருவோர், போவோரை வைத்து ஒரு வழியாக சமாளித்தனர்,''
''கார்ப்ரேஷன் சார்பில் பொங்கல் திருவிழா நடத்தப்பட்டாலும், சில கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் பொங்கல் விழா நடந்ததால், தங்கள் வார்டுகளிலிருந்து பொங்கல் விழாவுக்கு ஆட்களை கூட்டிச்செல்ல ஆர்வம் காட்டலையாம். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வு பிரச்னையில் நிலவும் அதிருப்தியால், அவர்களும் கலந்துக்கலையாம். மொத்தத்தில், அப்படி... இப்படினு பொங்கல் திருவிழாவை நடத்திட்டாங்க...'' விளக்கினாள் மித்ரா.
''அ.தி.மு.க.,க்காரங்க சட்டசபை தேர்தலுக்கு இப்பவே தயாராகிட்டாங்க போல,'' என அடுத்த மேட்டருக்கு தாவிய சித்ரா, ''திருப்பூர், அவிநாசின்னு நிறைய இடங்கள்ல, காலியா இருந்த பதவிகளுக்கு நிர்வாகிகளை போட்டிருக்காங்க. பொறுப்புல இருக்கற நிர்வாகிங்க பல பேரை மாத்தி, புதிய ஆட்களை போட்டிருக்காங்க. வர்ற எலக்ஷன்ல, திரும்பவும் கொங்கு மண்டலத்துக்குள்ள கால் பதிச்சே ஆகணும்ன்னு மேலிடத்து அசைன்மென்டாம்'' என்றாள்.
''இதுல இன்னொரு மேட்டரும் சொல்றாங்க மித்து. மின்கட்டண உயர்வு, சொத்து வரி விவகாரம்ன்னு, மாநில அளவிலான பிரச்னைங்க சம்பந்தமா ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துறதுல, திருப்பூர், கோவை மாவட்டத்துல இருக்கறவங்க அந்தளவு ஸ்பீடா இல்லைங்கறத தெரிஞ்சுக்கிட்ட, பொது செயலாளரு, 'இப்படி இருந்தா கட்சியை வளர்க்க முடியாது; சுறுசுறுப்பா கட்சி வேலை செய்யணும்'ன்னு உத்தரவு போட்டாராம். அதுக்கு அப்புறம் தான், கட்சிக்காரங்க சுறுசுறுப்பாக இருக்காங்கன்னு சொல்றாங்க'' என்றாள்.
மாயமான மினி பஸ்கள்
''அக்கா, பொங்கல் பண்டிகைக்கு டவுன் பஸ்களை, ஸ்பெஷல் பஸ்களாக மாற்றி, வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கலெக் ஷனுக்காக தினசரி டவுன் பஸ்களுடன் போட்டியிடும் மினிபஸ்கள், இந்த சமயத்தில் 'டிமிக்கி' கொடுத்து விட்டது. பயணிகள் கூட்டம் குறைவு என்பதால், பெயரளவுக்கு இயக்கி விட்டு, ஆர்.டி.ஓ.,விடம் பெர்மிஷன் வாங்காமல், 'டிரிப்'களை ரத்து செய்து விட்டனர். இதனால், பஸ்கள் இல்லாமல் பலரும் தவித்தனர். இது விஷயத்தில், ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் வழக்கம் போல் கண்டுகொள்ளவில்லை,'' என ஆதங்கப்பட்டாள் மித்ரா.
''அது தெரிஞ்சது தானே...'' என்ற சித்ரா, ''திருப்பூருக்கு வேலை தேடி வரும் நார்த் இண்டியன்ஸ்களிடம், பலத்த சோதனைக்கு பின்னரே, ஸ்டேஷனை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கின்றனர். கையில் கொண்டு வரும் பைகளை சோதனையிடும் போலீசார், ஒன்றுமே இல்லை என்றாலும், 'சம்திங்' வாங்கிட்டுதான் வெளியே அனுப்புகின்றனர். பணம் தர மறுப்பவர்களிடம், 'நீ ஹான்ஸ் போட்டிருக்கே. வாய பார்த்தாலே தெரியுது,' எனக்கூறி, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று, நான்கைந்து மணி நேரம் உட்கார வைத்து அப்புறம் தான் அனுப்பு கின்றனர்,''
''கப்பம் கட்டுற மேட்டர் தெரிஞ்ச நார்த் இன்டியன்ஸ் சிலர், தங்களுக்கு தெரிந்தவர்களை பிளாட்பார்முக்கு அழைத்து, ஸ்டேஷனை விட்டு வெளியே செல்கின்றனர். இப்படி செய்தால், திருப்பூரின் பேர் கெடாதா...'' என ஆவேசப்பட்டாள்.
வசமாக சிக்கிய அதிகாரி
''எச்சரிக்கை செய்தும் கூட, தன்னை மாத்திக்காம இருந்து ஸ்டேஷன் அதிகாரி இப்ப வசமா மாட்டிக்கிட்டாரு. சென்ட்ரல் ஸ்டேஷனில், டூட்டி பார்க்கும் லேடி அதிகாரி ஒருத்தர் 'சிவில்' புகாரில், ஒரு தலைபட்சமாக நடந்ததால, புதிய ஆபீசர் நடவடிக்கை எடுத்துட்டாரு. இத பார்த்த மத்த ஸ்டேஷன் அதிகாரிங்களும் கொஞ்ச கலக்கத்துல தான் இருக்காங்க. அதுமட்டுமில்லாம, தற்போது நடவடிக்கைக்கு உள்ளான அதிகாரி, பழைய கமிஷனர் இருக்கும் போதே சிக்கியிருக்க வேண்டியது. அவர் எச்சரிக்கை செய்து அனுப்பி வச்சாங்க. தன்னை மாற்றி கொள்ளாத அதிகாரி இப்ப மாட்டிட்டாங்க...''
''மித்து, என்ன சொன்னாலும் சிலர் கேட்கவே மாட்டாங்க... நம்ம டிஸ்ட்ரிக்கில், சமீப காலமாக டிரான்ஸ்பர் வாங்கி செல்லும் போலீசார் எண்ணிக்கை அதிகரிச்சுட்டே வருது. குறிப்பாக, காங்கயம், வெள்ளகோவில், பல்லடம் ஸ்டேஷன்களில் அந்தந்த இன்ஸ்பெக்டர்களே, தங்களுக்கு 'தோதான' போலீசாரை வைத்து கொள்ள நேரடியாக, டி.பி.ஓ., அலுவலக சூப்பிரண்டு மற்றும் ஏ.ஓ.,க்களிடம் பேசி டிரான்ஸ்பர் செய்து வருகின்றனர்,''
''இதனால, ஆபீஸில வேலை பார்க்கும் சிலருக்கு 'கவனிப்பு' நடப்பதால், குஷியாக உள்ளனர். போன வருஷம் லாஸ்டில், டிரான்ஸ்பர் பட்டியலில் கூட, அதிகாரிகளுக்கு பம்பர் பரிசு அடிச்சிருச்சு. இதற்கு முன், லேசில, அலுவலக அதிகாரிகளை வாங்க முடியாது. புதுசா வந்திருக்கற எஸ்.பி., தலையிட்டு, டிரான்ஸ்பர் விஷயத்தில் நடக்கும் குளறுபடிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, 'ஹானஸ்ட்' போலீசார் எதிர்பார்க்கிறாங்க...'' என்றாள் மித்ரா.
கில்லாடி போலீஸ்
''மித்து, திருட்டுகளை மூடி மறைப்பதில் பல்லடம் கிரைம் போலீஸ்காரங்க 'கிங்' தெரியுமா?''
''சொல்லுங்க. தெரிஞ்சுக்கறேன்...''
''பல்லடம் போலீஸ் லிமிட் நொச்சிபாளையம் பக்கத்துல, ஸ்ரீ கார்டன், வெங்கடேஸ்வரா நகரில் நடந்த பொங்கல் பண்டிகையின் போது, பக்கம் பக்கமா உள்ள நாலு வீடுகளில் நகை, பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருச்சு. ஆனா, விசாரணைக்கு போன, பல்லடம் கிரைம் போலீஸ்காரங்க, சும்மா ஐ வாஷ்க்கு ஒரு வீட்டை மட்டும் கணக்கு காட்டிட்டு, மிச்சத்த பொருட்களை கண்டுபிடிச்சுட்டு கணக்கு காட்டிக்கலாம்னு மூடி மறைச்சுட்டாங்க. இப்படி அடுத்தடுத்த வீடுகளில் நடந்த திருட்டு வெளியே தெரிந்த, உயரதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டியது வரும்னு நினைத்து, ஈயம் பூசன மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கணும்னு சொல்ற மாதிரி நடந்துட்டு, 'நைசா' எஸ்கேப் ஆயிட்டாங்க...''
''அக்கா, அங்க மட்டுமில்ல. லிங்கேஸ்வரர் ஊர் கிரைம் பிராஞ்சும் இப்படித்தான் இருக்குது...,'' என சிரித்த மித்ராவின் மொபைல் போன் விஜய் பாடலுடன் ஒலிக்கவே, பேசி விட்டு வைத்ததும், ''அக்கா, நடிகர் விஜய் கட்சி ஆரம்பிச்சதால, யூத்ஸ் மத்தியில, பெரிய ஈர்ப்பு இருக்கு. அதிலயும், புதுசா நிர்வாகிகள் நியமனம் பண்றதால, 'நம்ம கட்சிக்காரங்க, யாரும் அங்க போகக்கூடாதுன்னுட்டு,' ஏ.டி.எம்.கே.,வில் சில புதிய பொறுப்புகள் உருவாக்கிட்டாங்களாம். எப்டின்னு கேட்டா, மாநகராட்சி பகுதி கழகம் அமைப்பில், 12 வகையான சார்பு அணிகளுக்கும், நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால, ஒவ்வொரு பகுதிக்கும், 150 பேர் வரைக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்ய வாய்ப்புள்ளது. இப்படி செய்யறதால, பொறுப்பு ஏதுமில்லைன்னுட்டு, கட்சி தாவிடக்கூடாதுன்னு ஐடியா செஞ்சோம்னு மூத்த நிர்வாகிகள் சொல்றாங்க,'' என்றாள்.
மித்ரா பேசி முடித்ததும், ''ஓகே., மித்து, ஸீ யூ,'' என கையை ஆட்டியவாறே புறப்பட்டாள் சித்ரா.