நான்கு வழியாகிறது மரப்பாலம் ரயில்வே சுரங்கப்பாதை!
மதுக்கரை மரப்பாலத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை நான்கு வழியாகிறது; 82.7 மீட்டர் நீளம், 21.9 மீட்டர் அகலத்துக்கு ரயில்வே பாக்ஸ் அமைக்கும் பணியை, ரயில்வே நிர்வாகம் செய்கிறது. இதைத்தொடர்ந்து, சாலையின் இருபுறமும் அகலப்படுத்த, மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.
கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில், மதுக்கரையில் மரப்பாலம் என்கிற இடத்தில் குறுகிய ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது; அந்தக்காலத்தில் உள்ள போக்குவரத்துக்கேற்ப வடிவமைக்கப்பட்டதால், இப்போது ஒருபுறத்தில் வாகனங்கள் வரும்போது, மறுபுறம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
ஒரே ஒரு கனரக வாகனம் மட்டுமே கடந்து செல்ல முடியும் என்பதால், 'பீக் ஹவர்ஸில்' போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ரயில்வே சுரங்கப்பாதையை அகலப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவிடம், பொள்ளாச்சி எம்.பி.,ஈஸ்வரசாமி முறையிட்டார். இதைத்தொடர்ந்து, ரயில்வே தரப்பில் அனுமதி வழங்கியதோடு, பணியை உடனடியாக துவக்க உத்தரவிடப்பட்டது.
இதன்படி, மரப்பாலம் பகுதியில், 82.7 மீட்டர் நீளம், 21.9 மீட்டர் அகலத்துக்கு, நான்கு வழிச்சாலையாக சுரங்கப்பாதை விஸ்தரிக்கப்பட உள்ளது; இப்பணியை, பாலக்காடு ரயில்வே கோட்டம் மேற்கொள்ள இருக்கிறது.
அதற்காக, மரப்பாலம் வழியாக செல்லும் வாகனங்களை, மாற்று வழித்தடத்தில் இயக்க ரயில்வே நிர்வாகம் கோரியுள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் மாற்று வழித்தடத்தை ஆராய்ந்து வருகின்றனர்.
மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) அதிகாரிகள் கூறியதாவது:பாலத்தின் இரு புறமும் அகலப்படுத்தும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை செய்ய உள்ளது. எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும் என அளந்து, மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியதும், நிலம் கையகப்படுத்தப்படும். இனி, 'டிசைன்' தயாரித்து, மதிப்பீடு இறுதி செய்து, நிதி ஒதுக்கீட்டுக்கு அரசாணை பெற வேண்டும். அதன் பிறகே, மாநில நெடுஞ்சாலைத்துறை தரப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.