சாக்கடை கழிவுநீருக்குள் இறங்கி உடலை எடுத்துச்சென்ற கொடுமை

அவிநாசி; மயானத்துக்கு செல்ல பாலம் அமைத்து தர வேண்டுமென, அவிநாசி அருகே பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னளர்.

அவிநாசி, மடத்துப்பாளையம் - வினோபா வீதியில் ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முத்தான், 85. நேற்று மதியம் உடல் நலக்குறைவால் இறந்தார்.

செம்மாண்டம் பாளையம், கருமாபாளையம் செல்லும் ரோட்டில் மயானம் உள்ளது. மடத்துப்பாளையம் பகுதியில் இருந்து செம்மாண்டம் பாளையம் வழியாக கருமாபாளையம் செல்லும் சாலையில், அவிநாசி நெடுஞ்சாலை துறை சார்பில் ரோடு போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதே பகுதியில் வசிக்கும் ஒருவரின் ஆக்கிரமிப்பால், மக்கள் பயன்படுத்தி வந்த சாலை பகுதியை தவிர்த்து அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் செயல்பாட்டில் உள்ள கருமாபாளையம் குட்டை அருகே நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைக்கும் பணியை துவங்கியுள்ளனர். இதனால், சங்கமாங்குளத்துக்கு தண்ணீர் முறையாக போய் சேராது என்கின்றனர்.

நேற்று இறந்த முத்தான் உடலை அடக்கம் செய்வதற்காக கொண்டு சென்ற உறவினர்கள் மயானத்திற்கு செல்லும் பாதை கழிவுநீர் தேங்கி அடைக்கப்பட்டதை கண்டு செய்வதறியாமல் திகைத்து நின்றனர். வேறு வழியின்றி முழங்கால் அளவு உள்ள சாக்கடை கழிவுநீர் சேற்றில் இறங்கி மறுபுறம் கடந்து முத்தான் உடலை அடக்கம் செய்தனர்.

உறவினர்கள் கூறும் போது, 'உயிரை கையில் பிடித்துக்கொண்டு இறந்தவரின் உடலை சுமந்து மறுபுறம் சென்று அடக்கம் செய்துள்ளோம். இரவு நேரங்களில்,மயானம் உள்ள பகுதியில் மின்விளக்கு வசதிகள் இல்லை. பல வார்டு பகுதிகளில் இருந்து வரும் சாக்கடை கழிவு நீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கியுள்ளது. உடனடியாக மயானம் செல்ல பாலம் அமைத்து தர வேண்டும்,' என்றனர்.

Advertisement