பெண்கள் கழிப்பிடங்கள் பூட்டியதால் திறந்த வெளியை பயன்படுத்தும் அவலம் சின்னஒவுலாபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி மக்கள் தவிப்பு
சின்னமனூர்: பெண்கள் கழிப்பிடங்கள் பூட்டியதால் திறந்த வெளியை பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. 3 ஆண்டுகளாக குடிநீர் மேல்நிலைத் தொட்டி பயன்பாடின்றி உள்ளது. அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமம் அடைவதாக கிராம மக்கள் புலம்புகின்றனர்.
சின்னமனூர் ஒன்றியம், சின்ன ஒவுலாபுரம் ஊராட்சி, 9 வார்டுகளை கொண்ட இங்கு எழுவம்பட்டி, வரதராசபுரம், காமராசர்புரம் உட்கடை கிராமங்கள் உள்ளன.
5 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இக் கிராமத்தில் உள்ள காலனியில் அடிப்படை வசதிகள் இல்லை. திறந்தவெளி கழிப்பிடத்தை தவிர்க்க இங்கு கட்டிய 3 புதிய கழிப்பிடங்கள் கட்டி முடித்து திறக்காததால்,ஒரு தெருவின் இருபுறமும் திறந்தவெளி கழிப்பறையாக மாறி உள்ளது.
இந்திரா காலனி அருகில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளைவு மேல்நிலைத் தொட்டி கட்டி 3 ஆண்டுகளை கடந்தும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
இங்கு குண்டும் குழியுமான தெருக்கள், சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளுக்கு முன்பே குழி தோண்டி கழிவு நீரை சேகரிக்கும் அவல நிலை உள்ளது.
கதவுகள் இல்லாத கழிப்பறை
எழுவம்பட்டியில் கழிப்பறையில் தண்ணீர் வசதி, கதவுகள் இல்லாத அவலநிலை. தொடக்கப்பள்ளி மெயின் கதவுகளை உடைத்து இரவில் போதைப் பொருள் பயன்படுத்தும் வளாகமாக பயன்படுத்தப்படுகிறது. பள்ளி கழிப்பறை கதவுகளை உடைத்துவிடுவதால் ஆசிரியைகள் அவதிப்படுகின்றனர்.
பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் வழக்கம் போல பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நர்சரியில் நூற்றுக் கணக்காக மரக்கன்றுகள் வீணடிக்கப்பட்டுள்ளது.
ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை மது பாராக பயன்படுத்தப்படுகிறது. தலைவர், வார்டு உறுப்பினர்கள் இருந்த போதும் பிரச்னைகள் இருந்தது.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டுகொள்வது இல்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர்.
பாழடைந்த கிணற்றால் அச்சம்
பாண்டியன், எழுவம்பட்டி: புதிதாக கழிப்பிடங்களை கட்டி திறக்காமலே உள்ளது. தெருக்கள் குண்டும் குழியுமாக உள்ளது.
குப்பை அகற்றுவது இல்லை. சாக்கடை சுத்தம் செய்வது இல்லை. துணை சுகாதார நிலையம் அருகில் திறந்த வெளிக் கிணறு தடுப்பு சுவர் இன்றி பாழடைந்துள்ளது. குடிநீரை சுத்திகரித்து வழங்க வேண்டும். தெருவிளக்குகள் பழுதானால் மீண்டும் பழுதை சரி செய்வதில் பல மாதங்கள் இருளில் தவிக்கும் நிலை உள்ளது
தண்ணீர் வசதி இல்லாத கழிப்பிடம்
பார்த்திபன், சின்ன ஒவுலாபுரம்: பெண்கள் கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை. எனவே பெண்கள் திறந்தவெளி கழிப்பறையை பயன்படுத்துகின்றனர். வார்டு 7ல் கோயிலிற்கு எதிரில் உள்ள வீதிகள் மண் சாலையாக உள்ளது. மழை பெய்தால் வீதியில் நடக்கவும், டூவீலர்கள் ஒட்டி செல்ல முடியாது.
திடக் கழிவு மேலாண்மை திட்ட மையத்தில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்காமல், தீ வைத்து எரிக்கின்றனர். போதிய தெருவிளக்குகள் இல்லை. ஊராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கண்மாயை தூர்வார வேண்டும்.
வீட்டிற்குள் வரும் பாம்புகள்
அன்னமயில், சின்ன ஒவுலாபுரம்: கிராமத்தில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் பாம்புகள் வீட்டிற்குள் வருகிறது . தார் ரோடு, தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். தினமும் குடிநீர் வழங்க வேண்டும்.
பணியாளர் பற்றாக்குறை
ஊராட்சி அலுவலக வட்டாரங்களில் கேட்டதற்கு, குப்பையை ஊராட்சி தீ வைத்து எரிக்கவில்லை. யாரோ தீ வைக்கின்றனர். துப்புரவு பணியாளர் பணியிடம் 3 , குடிநீர் பணியாளர் 4 பணியிடங்கள் காலியாக உள்ளது.
குடிநீர் போதிய அளவு சப்ளை செய்யப்படுகிறது, தற்போது அதிகாரிகள் பொறுப்பெடுத்துள்ளனர். அனைத்து குறைகளும் ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்யப்படும். என்றனர்.