ஆம் ஆத்மியில் அதிக கிரிமினல்கள் வேட்பாளர்களாக போட்டி! பா.ஜ. குற்றச்சாட்டு
புதுடில்லி; புதுடில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மியில் 60 சதவீதம் வேட்பாளர்கள் குற்ற பின்னணி உடையவர்களாக இருக்கிறார்கள் என்று பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.
புதுடில்லி சட்டசபைக்கு பிப்.5ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் அவகாசம் முடிந்து, மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.
மொத்தம் 477 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 1040 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. இந் நிலையில், இந்த தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்களில் 60 சதவீதம் குற்றப்பின்னணி உடையவர்களாக இருக்கிறார்கள் என பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஷெசாத் பூனம்வாலா கூறி உள்ளதாவது; தேர்தல் களத்தில் கிரிமினல்களுக்கு இடம் இல்லை, எங்கள் கட்சியில் அப்படி யாரும் இல்லை என்று ஆம் ஆத்மி கூறியது.
ஆனால் வேட்பாளர்கள் இறுதி பட்டியலில் அதிக கிரிமனல் பின்னணி கொண்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. கிட்டத்தட்ட 60 சதவீதம் வேட்பாளர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். அதற்கு அடுத்து காங்கிரசில் அதிகம் பேர் குற்றப்பின்னணி உடையவர்களாக இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.