தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் ரூ.13 கோடி பறிமுதல்
சென்னை: தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
வேலுார் மாவட்டம், காட்பாடியில் தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லுாரியில், கடந்த ஜன., 3ம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. 3 நாட்களுக்கு மேலாக, கதிர் ஆன்ந்துக்கு சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின், கல்லுாரியில் உள்ள, சர்வர் அறைக்கு, சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாக வெளியான தகவல் பின்வருமாறு: கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கல்லூரியில் இருந்து ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட ஆவணங்கள், வீட்டிலிருந்து சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கதிர் ஆனந்த் வீட்டில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கதிர் ஆனந்தின் சொத்துக்கள் குறித்த விவரங்களை திரட்டி வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.