வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அழைக்கிறது...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உலக புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.சென்னை-செங்கல்பட்டு ரோட்டில், கூட்டுரோடு பிரிவு வழியாக இங்கு செல்லலாம்.
இங்குள்ள ஏரி 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது.இந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக, 16 அடி உயரம் நீர் பிடிப்பு கொண்டு ஏரி முழு கொள்ளளவு கொண்டுள்ளது.
பங்களாதேஷ், பர்மா, இலங்கை, சைபிரியா, ஆஸ்திரேலியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பறவைகள் வேடந்தாங்கலுக்கு வலசையாக வழக்கம் போல வந்துள்ளன,வருகை தருவதன் நோக்கம் இங்குள்ள இதமான காலசூழ்நிலையில் தனது இணையுடன் தங்கி இனப்பெருக்கம் செய்து திரும்புவதுதான்.
செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில், குளிர்காலத்தில் பறவைகள் வலசை வர துவங்குகின்றன.டிச, ஜன, பிப்., மாதத்தில் வலசை வரும் பறவைகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.மார்ச், ஏப்., மே மாதத்தின் தனது குஞ்சுகளுடன் திரும்பச் சென்றுவிடும்.
இப்போது கூழைக் குடா, கரண்டி வாயன், நத்தை குத்தி நாரை, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான், மற்றும் வக்கா, புள்ளி மூக்கு வாத்து, வர்ண நாரை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்துள்ளன.இன்றைய தேதிக்கு 30ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள், தங்கியுள்ளன.
இந்தப் பறவைகள் ஒன்றையொன்று அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளும்,வந்த பறவைகள் கூடுகட்ட குச்சிகளுடன் பறந்து செல்லும் காட்சிகளும் பார்க்க ரம்மியமாக இருக்கும்.
இப்போது கூகுள் மேப் வசதி இருப்பதால் எங்கு இருந்தும் எளிதில் இங்கு வரலாம்,குழந்தைகளுக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும் என்பதால் குழந்தைகளை அழைத்து வாருங்கள் அனுமதி கட்டணம் உண்டு, கேமராவிற்கு தனிக்கட்டணம். கையோடு பைனாகுலர் கொண்டு வந்தால் பறவைகளை நெருக்கத்தில் பார்த்து ரசிக்கலாம்.
-எல்.முருகராஜ்