ராக்கிகர்ஹியின் மிகப்பெரிய நீர்த்தேக்கம்: சரஸ்வதி நதி பற்றி கூடுதல் தடயங்கள் கிடைக்க வாய்ப்பு

2

ராக்கிகரி: ஹரியானா மாநிலம் ராக்கிகர்ஹியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நீர்த்தேக்கத்தால், சரஸ்வதி நதி பற்றிய கூடுதல் தடயங்கள் நமக்கு கிடைக்கும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஹரியானாவின் ராக்கிகர்ஹியில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் அகழாய்வு பணி மேற்கொண்டனர்.

கிராமத் தொழிலாளர்களுடன் இணைந்து பத்துக்கு பத்து சதுர அடி கொண்ட அகழியை தோண்டினர். அந்த அகழியிலிருந்து மண் அகற்றியபோது பல நுாற்றாண்டுகள் பழமையான சேற்றுப்பகுதி தென்பட்டது. சேறு அகற்றி பார்க்கும் போது மிகப்பெரிய நீர்த்தேக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடத்தில் ஹரப்பா நாகரிக காலத்து நீர் சேமிப்பு அமைப்பு இருப்பதாக அவர்கள் நீண்ட காலமாக சந்தேகித்தனர். ஆனால் அன்று அவர்களின் கண்டுபிடிப்பு அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டி வியப்படையச்செய்தது.

கிமு 2600 முதல் 1900 வரை செழித்த ஹரப்பா நாகரிகத்தின் மிகப்பெரிய நகர்ப்புற மையங்களில் ஒன்றாக இந்த இடம் கருதப்படுகிறது.
இந்தப் பகுதி 500 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது மொஹஞ்சதாரோவை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பெரியது. இருப்பினும், சமீப காலம் வரை அகழ் பொருட்கள் எதுவும் இங்கு கண்டுபிடிக்கப்படவில்லை. இங்கு டிசம்பர் 2024ல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி ஒரு சிக்கலான மற்றும் அதிநவீன நீர் மேலாண்மை அமைப்பை வெளிப்படுத்தியது.
இதுவரை, மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் கிணறுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன.


இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ஏ.எஸ்.ஐ.,) இணை இயக்குநர் ஜெனரலும் ராக்கிகர்ஹியில் அகழ்வாராய்ச்சி இயக்குநருமான சஞ்சய் மஞ்சுல் கூறியதாவது:

ராக்கிகர்ஹியில் ஆராய்ச்சியாளர்களால் பல முறை தோண்டப்பட்டது, ஆனால் இதுவரை நீர்த்தேக்கம் பற்றிய எந்த தகவலும் கண்டுபிடிக்கப் படவில்லை. தற்போது முதல் முறையாக,சுமார் 3.5 முதல் 4 அடி ஆழம் கொண்ட நீர் சேமிப்புப் பகுதி வெளிப்பட்டுள்ளது. ஹரப்பா நாகரிக காலங்களில் நீர் மேலாண்மையைப் புரிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்புகள் உதவும்.
புவியியலாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடையே சரஸ்வதி நதி, அதன் துணை நதிகள் குறித்து வளர்ந்து வரும் ஆராய்ச்சிக்கும் இந்த கண்டுபிடிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1924ம் ஆண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சர் ஜான் மார்ஷல் சிந்து சமவெளி நாகரிகத்தை அடையாளம் கண்டு கிட்டத்தட்ட சரியாக 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கண்டுபிடிப்பு வந்துள்ளது.

"சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, நதி வறண்டு போகத் தொடங்கியபோது, ​​விவசாயம் உட்பட தங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக மக்கள் தண்ணீரைச் சேமிக்க வேண்டியிருந்தது.

இந்த கண்டுபிடிப்புகள் நீர் மேலாண்மை முறை மற்றும் ஒரு சமூகம் எவ்வாறு சிந்திக்கும் முறை பற்றிய ஒரு யோசனையை நமக்குத் தரும்.

இவ்வாறு சஞ்சய் மஞ்சுல் கூறினார்.

குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் சரஸ்வதி நதி தொடர்பான சிறப்பு ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் ஏ.ஆர்.சௌத்ரி கூறுகையில்,

த்ரிஷத்வதி நதியானது, சரஸ்வதி நதியின் ஒரு முக்கியமான துணை நதியாக ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"த்ரிஷத்வதி ஒரு வேத நதி மற்றும் ராக்கிகர்ஹிக்கு அருகிலுள்ள ஒரே நீர் ஆதாரமாக இருந்தது என்றார்.

Advertisement