டங்ஸ்டன் விவகாரத்தில் நாளை மகிழ்ச்சியான செய்தி: அண்ணாமலை

14


சென்னை: ''டங்ஸ்டன் விவகாரத்தில் நாளை(ஜன.,22) மகிழ்ச்சியான செய்தி வரும்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: டங்ஸ்டன் விவகாரத்தில், அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை பா.ஜ.,வினர் டில்லி அழைத்துச் செல்கின்றனர். நாளை அவர்கள், மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க உள்ளனர். நாளை மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வரும். இதில் உறுதியாக இருக்கிறோம். நாளை மதியத்திற்கு மேல் பேசுகிறோம். இந்த பிரச்னை குறித்து தெரிந்த பிறகு, இதற்கு தீர்வு கொடுக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.


பசு கோமியம் குறித்து சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி பேசியது சிலருக்கு ஏற்புடையதாக இருக்கலாம். சிலருக்கு ஏற்புடையதாக இருக்காது. இதனை விட்டுவிடலாம். அனைவருக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உள்ளது. அதனை யார் மீதும் திணிக்கவிரும்பவில்லை.
பொது வெளியில் ஒரு கருத்தை திணிக்க வேண்டாம் என்பது எனது வேண்டுகோள். ஐ.ஐ.டி., அரங்கில் பேசவில்லை. கோசாலையில் பேசி உள்ளார். இதனை வைத்துக் கொண்டு, அவர் செய்த சாதனைகளை தள்ளிவிட்டு, இதைப்பற்றி மட்டும் பேச வேண்டாம்.
ஐஐடி இயக்குநர் தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட நிகழ்வில் பேசிய கருத்து என்பதால், ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும். ஏற்றுக் கொள்ளாதவர்கள் விட்டுவிடட்டும்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisement