பட்டா மாறுதலுக்கு ரூ.4,500 லஞ்சம்; பெண் வி.ஏ.ஓ., கைது
தென்காசி: பட்டா மாறுதலுக்கு ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை(வி.ஏ.ஓ.,) லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் குமாரவேல். இவர், ராஜகோபாலகேரி கிராமத்தில், தனது தந்தையின் பெயரில் உள்ள சொத்தை தனது பெயரில் பட்டா மாறுதல் செய்ய கிராம வி.ஏ.ஓ., பத்மாவதியை அணுகி உள்ளார். அதற்கு அவர், ஆன்லைனில் விண்ணப்பிக்க கூறியுள்ளார். அதன்படி விண்ணப்பித்த பிறகு, மீண்டும் வி.ஏ.ஓ.,வை குமாரவேல் தொடர்பு கொண்டார்.
அப்போது, பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் செலவாகும் என பத்மாவதி கூறியுயுள்ளார். அவ்வளவு பணம் இல்லை என குமாரவேல் கூறியதைத் தொடர்ந்து ரூ.4,500 தர வேண்டும் என பத்மாவதி கேட்டுள்ளார்.
அதனை கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியும் எனக்கூறியுள்ளார்.
இதனை கொடுக்க விரும்பாத குமாரவேல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை குமாரவேல் கொடுத்தார்.
அதனை வாங்கிய பத்மாவதியை அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.