தி.மு.க., ஆட்சியில் பணம் எங்கே செல்கிறது: இ.பி.எஸ்., கேள்வி
சேலம்: '' தி.மு.க., ஆட்சியில் வரும் வருமானம் எங்கே செல்கிறது,'' என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார்.
சேலத்தில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: எதிர்க்கட்சியாக தி.மு.க., இருந்த போது, அ.தி.மு.க., அரசு அதிக கடன் வாங்கி தமிழக மக்களை கடனாளியாக மாற்றிவிட்டது எனக்குற்றம் சாட்டியது.
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் ரூ.3.53 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்கி இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழகம் என்ற சாதனையை ஸ்டாலின் அரசு படைத்துள்ளது. இவர்களது ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை. கடன் வாங்குவதில் மட்டும் சாதனை படைத்து உள்ளனர். இவர்கள் ஆட்சி முடியும் போது தமிழகத்தின் கடன் சுமையை ரூ.5 லட்சம் கோடியாக ஏற்றிவிடுவார்கள்.
அ.தி.மு.க., ஆட்சியை விட தற்போதைய ஆட்சியில் பெட்ரோல், மதுபானம் விற்பனை மூலமும், சுங்கவரி, வாகன விற்பனை, ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய அரசின் நிதிப் பகிர்வு மூலமும் அதிக வருமானம் வந்துள்ளது. ரூ.1,10,894 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
மூலதன செலவும் அதிகம் ஆகவில்லை. புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால், 3.53 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். மூலதன செலவும் இல்லை, புதிய திட்டங்களும் வரவில்லை. அப்படியானால் அந்த பணம் எல்லாம் எங்கே போனது?
நிதிக்குழு பரிந்துரை அடிப்படையில் கடன் வாங்கியதாக தி.மு.க., அரசு சொல்கிறது. நாங்களும் அப்படித்தான் கடன் வாங்கினோம். என்னை அமைதிப்படை அமாவாசை என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகிறார். அது, அவருக்கு பொருத்தமான பெயர். அவருக்கான பெயரை அவரே தேடிக் கொண்டார். ஐந்து கட்சி மாறியவர், தற்போது தி.மு.க.,வில் உள்ளார்.
அடுத்து எந்தக் கட்சிக்கு செல்வார் என தெரியவில்லை. ஐந்தாண்டுகளில் இரண்டு சின்னங்களில் நின்றவர். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் சட்டசபையில் கருணாநிதியையும், தி.மு.க., நிர்வாகிகளையும் விமர்சித்து பேசியது அவைக்குறிப்பில் உள்ளது.
சேகர்பாபு விமர்சித்து பேசியதும் உள்ளது. இவர்கள் அரசியல் வியாபாரிகள். இவர்கள் எங்களை பேசுவதற்கு எந்த உரிமையும், அருகதையும் கிடையாது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.