அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் கவர்னருடன் அடுத்தடுத்து சந்திப்பு

புதுச்சேரி : கவர்னரை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அடுத்தடுத்து சந்தித்து பேசினர்.

புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், தென்னிந்திய அறிவியல் கண்காட்சி மற்றும் ரயில் நிலையத்தை ஆய்வு செய்துவிட்டு மதியம் 12:00 மணிக்கு ராஜ்நிவாஸ் திரும்பினார். முன்னதாக அங்கு எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் மாளிகையில் காத்திருந்தனர்.

இதனிடையே உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் கவர்னர் மாளிகை வந்தார். கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்த பின்பு அமைச்சர் நமச்சிவாயம் வெளியே புறப்பட்டார்.

அமைச்சரை தொடர்ந்து தி.மு.க., எம்.எல்.ஏ.க்களும் வெளியே வந்தனர். அமைச்சர் நமச்சிவாயம் கவர்னரை ஏன் சந்தித்தார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஊர்காவல்படை வீரர்களுக்கு கிராம உதவியாளர் பணி, உள்ளாட்சித்துறை தினக்கூலி ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கை மனு அளித்தாக தெரிவித்தனர்.

புதுச்சேரி அரசியலில் மதுபான ஆலைக்கு அனுமதி அளித்தல் உள்ளிட்ட விவகாரங்கள் புயலை கிளப்பி வரும் சூழ்நிலையில், உள்துறை அமைச்சர் மற்றும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அடுத்தடுத்து கவர்னரை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement