அதானி மகனுக்கு ஆடம்பரம் இல்லாத எளிமையான திருமணம்
பிரயாக்ராஜ்: அதானி குழுமங்களின் தலைவர் கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் மற்றும் குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஷாவுக்கு, 2023 மார்ச் மாதம் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களுடைய திருமணம் குஜராத்தின் ஆமதாபாதில், பிப்., 7ம் தேதி நடக்க உள்ளது.
குஜராத்தின் மான்டேரா மைதானத்தில் அதே நாளில் நடக்க இருந்த இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணி போட்டி வேறு மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனால், அந்த மைதானத்தில், இந்தத் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாயின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள், தனியார் விமானங்கள், 58 நாடுகளைச் சேர்ந்த சமையல் நிபுணர்களுடன், 10,௦௦௦ கோடி ரூபாய் செலவில் இந்தத் திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் வெளியாயின.
அது குறித்து, கவுதம் அதானி நேற்று கூறுகையில், ''இந்தத் திருமணம் மிகவும் எளிமையாக, பாரம்பரிய முறையில் நடக்கும். மிகவும் பிரமாண்டமான முறையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களை வரவழைத்து ஆடம்பரத்தை காட்ட மாட்டோம். சாதாரண குடும்பத்தின் திருமணம் போலவே இது நடக்கும்,'' என, அவர் குறிப்பிட்டார்.