ஸ்டாலின் வைத்த கோரிக்கைக்கு உடனடியாக களமிறங்கிய மோடி
சென்னை: தமிழக அரசு கோரிக்கை வைத்த அடுத்த நாளே, நெல்லின் ஈரப்பதத்தை அறிய, நான்கு பேர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
மத்திய அரசின் சார்பில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறது. அதன்படி, நடப்பு சீசனில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளது. டெல்டா மாவட்டங்களில், நெல் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன் திடீரென மழை பெய்தது.
இதனால், விவசாயிகளிடம் இருந்து, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்குமாறு, மத்திய அரசுக்கு, தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று முன்தினம் கடிதம் எழுதினார். இதே கோரிக்கையை, டில்லியில் நேற்று முன்தினம், மத்திய உணவு துறை செயலரிடம், தமிழக உணவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
இதையடுத்து, தமிழகத்தில் நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய, இந்திய உணவு கழக அதிகாரிகள் நான்கு பேர் குழுவை மத்திய அரசு நேற்று அமைத்துள்ளது. இக்குழு, சில தினங்களில் தமிழகம் வந்து, தமிழக அரசு அதிகாரிகளுடன் இணைந்து, மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று, நெல் மாதிரிகளை எடுத்து வந்து, ஆய்வகத்தில் பரிசோதிக்க உள்ளது.
அக்குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப, நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்யும், நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்துவது குறித்து, மத்திய அரசு முடிவு செய்யும்.