எங்கள் மீது வழக்கு போட்டு மிரட்டலாம் என நினைக்காதீர் மாஜி அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை
விழுப்புரம் : தி.மு.க., ஆட்சியில் தொட்டில் குழந்தை திட்டம் தற்போது குப்பை தொட்டியில் உள்ளதாக அ.தி.மு.க., மாவட்ட செய லாளர் சண்முகம் எம்.பி., கூறினார்.
விழுப்புரத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., பேசியதாவது:
தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் மக்களிடம் கூறியதை நிறைவேற்றாமல் உள்ளனர். கல்வி கடன் ரத்து செய்யப்படும் என தெரிவித்தனர். ஆனால் செய்யவில்லை.
ஆட்சியாளர்கள், அதிகாரத்தில் உள்ளோரின் குடும்பங்கள் மட்டுமே முன்னேறியுள்ளது.
மகளிர் முன்னேற்றத்திற்காக ஆட்சி புரிந்தவர் ஜெ., அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களை முடக்கிய சாதனை தி.மு.க.,வை சேரும். அ.தி.மு.க., பழனிசாமி ஆட்சியில் 11 மருத்துவ கல்லுாரிகள், 6 சட்ட கல்லுாரிகள், 67 கலை, அறிவியல் கல்லுாரிகள் கொண்டு வரப்பட்டது. தற்போது விழுப்புரம் மாவட்டம் எந்த வளர்ச்சியும் அடையவில்லை.
தமிழகத்தில் ரவுடிசம், சாராயம், கஞ்சா விற்பனை தலைவிரித்தாடுகிறது.
இங்கு, அரிசி இல்லை னாலும், கஞ்சா மட்டும் உள்ளது. இதனால், கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகமாகியுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் 35 ஆயிரம் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு நடைபெற்றது.
எங்கள் மீது வழக்கு போட்டு மிரட்டலாம் என நினைக்காதீர்கள். தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பில்லை. மக்கள் இனியும் உங்களை நம்ப மாட்டார்கள். உங்கள் மீது அதிருப்தியில் உள்ளனர்.
விரைவில் குடும்ப ஆட்சிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வரும் என கூறினார்.