கல்லூரியில் பணம் பறிமுதல்; அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் 'ஆஜர்'

23


சென்னை: தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்குச் சொந்தமான வீடு, கல்லூரியில், அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், இன்று (ஜன.,22) கதிர் ஆனந்த் நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

தி.மு.க., பொதுச்செயலராகவும், அமைச்சராகவும் இருப்பவர் துரைமுருகன். இவரது மகன் கதிர் ஆனந்த்; வேலுார் தொகுதி தி.மு.க., - எம்.பி.,யாக இருக்கிறார். அந்த தொகுதியில், 2019ல் கதிர் ஆனந்த் போட்டியிட்ட போது, தன் பெயரிலும், மனைவி சங்கீதா, மகள்கள் செந்தாமரை, இலக்கியா, மகன் இளவரசன் ஆகியோர் பெயரிலும், 88.80 கோடி ரூபாய்க்கு அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் இருப்பதாக, வேட்பு மனுவில் தெரிவித்திருந்தார். கதிர் ஆனந்த் எம்.பி.,யானதில் இருந்து, அவரின் மனைவி, மகள்கள் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகமாகி இருப்பதையும் கண்டறிந்தனர்.



சில தினங்களுக்கு முன், காட்பாடி காந்தி நகரில் உள்ள கதிர் ஆனந்த் வீடு மற்றும் கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள அவருக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரி ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், 44 மணி நேரம் சோதனை நடத்தினர். இச்சோதனையில், கதிர் ஆனந்த் கல்லுாரியில் இருந்து, 13.07 கோடி ரொக்கம் மற்றும் வீட்டில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த இடத்தை உடைத்து, அங்கிருந்த, 75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


சொத்து ஆவணங்கள் மற்றும், 'டிஜிட்டல்' ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த பணம் குறித்து விளக்கம் அளிக்க சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று (ஜன.,22) விசாரணைக்கு ஆஜராகும்படி கதிர் ஆனந்திற்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டு இருந்தது. நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று (ஜன.,22) கதிர் ஆனந்த் நேரில் ஆஜரானார்.

Advertisement