நிவாரணம் கோரி விவசாயிகள் மறியல்!
மயிலாடுதுறை: மழையால் பாதித்த பயிர்களுக்கு காப்பீடு தொகை, நிவாரணம் வழங்க வலியுறுத்தி, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி விடிய விடிய பெய்த கனமழையால் 26 ஆயிரத்து 850 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு கதிர் முற்றி அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது.
தொடர்ந்து தண்ணீர் வடியாத நிலையில் நெல்மணிகள் முளை விட தொடங்கிவிட்டன. இதனால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். பாதிப்பு குறித்து வேளாண் துறை அதிகாரிகள் இதுவரை பார்வையிடாத காரணத்தால் விவசாயிகள் ஆத்திரமடைந்துள்ளனர்.
இந்நிலையில் சீர்காழி அருகே உள்ள தருமக்குளம் கடை வீதியில் திரண்ட விவசாயிகள், அழுகிய நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய காப்பீட்டுத் தொகை மற்றும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மயிலாடுதுறை- பூம்புகார் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விவசாயிகள் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தருமபுரம் பகுதியில் வணிகர்கள் கடை அடைப்பு செய்திருந்தனர்.
சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த பூம்புகார் போலீசார், சீர்காழி தாசில்தார் அருள்ஜோதி, வேளாண்துறை ஏ.டி. ராஜராஜன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
தொடர்ந்து போலீசாரில் கோரிக்கையை ஏற்று விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு, வேளாண்துறை இணை இயக்குனர் வரும் வரை சாலை ஓரத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.