போக்குவரத்து மிகுதியான சாலை மின் விளக்கு இல்லாததால் அச்சம்
கள்ளக்குறிச்சி : வாகன போக்குவரத்து மிகுதியான சாலையில் மின் விளக்குகள் இன்மையால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் - கூத்தக்குடி சாலை வழியாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் பலர் இரு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். சாலையில் மின் விளக்குகள் ஏதும் இல்லாததால் இரவு நேரங்களில் 'கும் இருட்டாக' காணப்படுகிறது.
சாலையின் இருபுறமும் வயல்வெளி பகுதி என்பதால் பாம்பு போன்ற விஷ ஜந்துகள் இரவு நேரங்களில் சாலையை கடக்கிறது. வாகன போக்குவரத்து மிகுதியான இச்சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது.
இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.
இச்சாலையில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை கோரி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
எனவே, வாகன போக்குவரத்து மிகுதியான நீலமங்கலம் சாலையில் சாலையோரம் மின் விளக்குகள் அமைப்பதற்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.