குற்றச்செயல்களில் ஈடுபடும் போலீசார்; ஐகோர்ட் கடும் கண்டனம்
சென்னை: போலீசார் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு, டிசம்பர், 16ம் தேதி இரவு, திருப்பத்துாரில் இருந்து, 20 லட்சம் ரூபாயுடன் வந்த முகமது கவுஸ் என்பவரிடம் வழிப்பறி செய்தது தொடர்பாக, சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., ராஜா சிங் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த, சென்னை வருமான வரி அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் பிரபு, 31, ஆய்வாளர் தாமோதரன், 41, ஊழியர் பிரதீப், 42 ஆகியோரும் கைதாகினர்.
இந்நிலையில், சிறப்பு எஸ்.ஐ., ராஜா சிங், வருமான வரித்துறை அலுவலர் தாமோதரன் ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று (ஜன.,22) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'போலீசார் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. வேலியே பயிரை மேய்வதா?' என கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு போலீசார் தரப்பில், 'வழக்கில் இன்னும் விசாரணை நிறைவடையவில்லை. மேலும் ஒரு சிறப்பு எஸ்.ஐ., கைது செய்யப்பட்டிருப்பதால் விசாரணை நடத்த வேண்டி உள்ளது' என விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் ஜாமின் மனு மீதான விசாரணை ஜனவரி 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.