டில்லியில் குடிநீர் இல்லை; ஆல்கஹால் கிடைக்கிறது; பிரதமர் மோடி
புதுடில்லி: 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
டில்லி சட்டசபைக்கு, பிப்., 5ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது; பிப்., 8ல் முடிவுகள் அறிவிக்கப்படும். ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், 27 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பா.ஜ.,வும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இரு கட்சிகளை தவிர காங்கிரஸ், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன.
இந்நிலையில் டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு குறித்து பிரதமர் மோடி ஆடியோ வெளியிட்டுள்ளார்.அந்த ஆடியோவில், அவர் கூறியதாவது: டில்லியில் இலவச சுகாதார சேவைக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்கள் அதை செயல்படுத்த விரும்பவில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் பல நன்மைகள் உள்ளன என்று டில்லி மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். ஆனால் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஆம் ஆத்மி அரசு தடைகளை உருவாக்கினர்.
முதுகெலும்பு
பா.ஜ., நடுத்தர மக்களை இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதுகிறது. நாட்டில், அனைத்து நவீன வசதிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது. ஆம் ஆத்மி அரசு மீது, மக்கள் வெளிப்படையாக கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள், அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என மக்கள் கேட்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சி தினமும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை.
மகத்தான வெற்றி
டில்லியில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை பெறுவதை, பா.ஜ., தொண்டர்கள் இலக்காகக் கொள்ள வேண்டும். டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு மகத்தான வெற்றியை தொண்டர்கள் உறுதி செய்வார்கள்.பெண்களுக்கு ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை.
பஞ்சாபில் பெண்களுக்கு மாதம் தோறும் பணம் தருவோம் என ஆம் ஆத்மி அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆனால் பா.ஜ., அரசு மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.