100 நாள் வேலை திட்டம்; 2 மாத சம்பளம் வழங்கவில்லை; தி.மு.க.,வுக்கு இ.பி.எஸ்., கண்டனம்

சென்னை: தி.மு.க., அரசு 100 நாள் வேலையையே நம்பி வாழும் ஏழை, எளிய கிராம மக்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உள்ள 100 நாள் வேலை, 150 நாளாக உயர்த்தப்படும் என்றும்; சம்பளம் 300 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் சட்டசபை தேர்தலுக்கு முன் தி.மு.க., வாக்குறுதி அளித்தது.


100 நாள் வேலை திட்டம் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் உறுதி அளித்திருந்தது. ஆனால் இதுவரை இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் ஆவார்கள். இந்த சம்பளத்தை நம்பியே அவர்கள் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.


இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை, இன்றுவரை வழங்கவில்லை. இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததால் பணம் இல்லாத நிலையில் இந்த ஆண்டு தைப் பொங்கல் கொண்டாட முடியாத சூழ்நிலையை ஏற்படுத்திய திமுக அரசுக்கு, எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


ஜனவரியில் பல மாவட்டங்களில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படவில்லை என்றும் செய்திகள் வருகின்றன. எனவே, 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்குமாறும், மீண்டும் அவர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்குமாறும் தி.மு.க.,வின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

Advertisement