'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்த பாக்., பிரதமர்: கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்
இஸ்லாமாபாத்: அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப்பிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 'எக்ஸ்' சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்தார். ஆனால், இந்த சமூக வலைதளத்திற்கு அந்நாட்டில் தடை உள்ளதால், எந்த விபிஎன் செயலியை பயன்படுத்தி வாழ்த்து தெரிவித்தீர்கள் என அவரை பாகிஸ்தான் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த ஆண்டு, தேசிய பாதுகாப்பு பிரச்னைகளை காரணம் காட்டி ' எக்ஸ் ' சமூக வலைதளத்திற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. பயங்கரவாதிகள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு 'எக்ஸ் ' சமூக வலைதளத்தை பயன்படுத்துவதாகவும், அரசு குற்றம்சாட்டியது. ஆனால், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும் டிரம்ப்பிற்கு எக்ஸ் சமூக வலைதளத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து அந்த வாழ்த்துப் பதிவில் எக்ஸ் தளம் சார்பில் கம்யூனிட்டி நோட் வெளியிடப்பட்டது. அவரே பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தை தடை செய்துவிட்டு, தடையை மீறி பதிவும் வெளியிட்டுள்ளதாக எக்ஸ் தளம் குறிப்பு வெளியிட்டது. விபிஎன் மூலம் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி உள்ளதாகவும், தடையை மீறியதால், அவர் ஒரு கிரிமினல் என்றும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு எதிராக இணையதளத்தில் விமர்சனம் கிளம்பி உள்ளது. இருப்பினும், இந்த வலைதளத்திற்கான தடையை பாகிஸ்தான் நீக்கவில்லை.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் அதே 'எக்ஸ்' வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டிரம்ப்பிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அமெரிக்கா- பாகிஸ்தான் கூட்டாண்மையை வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன். பல ஆண்டுகளாக இரு நாடுகளும் பிராந்திய அளவிலும், அதற்கு அப்பாலும் நமது மக்கள் அமைதிக்காக இணைந்து பணியாற்றி உள்ளன. வருங்காலத்திலும் நாங்கள் எதைத் தொடர்ந்து செய்வோம். டிரம்ப்பின் இரண்டாவது அதிபர் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துகள் எனக்கூறியுள்ளார்.
இதனையடுத்து, அவரது பதிவுக்கு கீழே, பாகிஸ்தானை சேர்ந்தவர்கள், தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுவிட்டு, 'எக்ஸ்' சமூக வலைதளத்திற்கு தடை விதித்ததால் விபிஎன் செயலியை பயன்படுத்தி டிரம்ப்பிற்கு ஷெபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவிக்கிறார்,' என குறிப்பு எழுதி வைத்துள்ளனர்.
மேலும் அவரது பதிவுக்கு பலர், எந்த விபிஎன் செயலியை பயன்படுத்துகிறீர்கள். எக்ஸ் வலைதளத்திற்கு தடை விதித்துவிட்டு, விபிஎன் பயன்படுத்தி ஷெபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவிப்பதை டிரம்ப் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என தங்களுக்கு தோன்றியதை பதிவிட்டு வருகின்றனர்.