5 ஊராட்சிகளில் மக்கள் திட்ட முகாம் 175 மனுக்கள் மீது உடனடி தீர்வு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், தென்னேரி, கட்டவாக்கம், ஊத்துக்காடு, பழையசீவரம், வாரணவாசி ஆகிய 5 ஊராட்சிகளில் நேற்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.

காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடந்த முகாமில், கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

முகாமை முன்னிட்டு ஏற்கனவே பொது மக்களிடத்தில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டிருந்தன.

அம்மனுக்களை துறை சார்ந்த அலுவலர்கள் பரிசீலனை செய்து, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், பட்டா திருத்தம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சாதி சான்று, குடும்ப அட்டை, மகளிர் சுய உதவிக்குழு வங்கி கடன், தொழில் கடன் மானியம், வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்பில் இடுப்பொருட்கள் மானியம் என, 176 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளில் நடந்த இம்முகாம்களில், மொத்தம் 2,000 மனுக்கள் பெறப்பட்டு, 175 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.

இதில், உத்திரமேரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி., செல்வம் மற்றும் அந்தந்த பகுதி ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.



இன்றும், நாளையும் ஒத்தி வைப்பு




காஞ்சிபுரம் மாவட்டத்தில், மக்களுடன் முதல்வர் திட்டம் ஜனவரி மாதம் 21 முதல் 24ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மூன்றாம் கட்டமாக முகாம்கள் நடத்தி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.காஞ்சிபுரம் தாலுகா மற்றும் உத்திரமேரூர் தாலுகாவில் 10 முகாம்களும், குன்றத்துார் தாலுகாவில் 10 முகாம்கள் என, மொத்தம் 20 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. இதில், 23 மற்றும் 24 ஆகிய இரு தேதிகளில், குன்றத்துார் தாலுகாவில் உள்ள , சிறுகளத்துார், மலையம்பாக்கம், நத்தம்பாக்கம் , படப்பை உள்ளிட்ட 10 கிராம ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம்கள் நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் முகாம் நடைபெறும் நாள் பின் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement