மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணி மந்தம்
உத்திரமேரூர்:-உத்திரமேரூர் ஒன்றியம், ஆதவப்பாக்கம் ஊராட்சியில், பில்லாஞ்சிமேடு, கடம்பர்கோவில், வெங்கச்சேரி ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்களுக்கு, சிறு மின்விசைக் குழாய்கள், கைப்பம்புகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆகியவை வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெங்கச்சேரி கிராமத்தில் உள்ள மக்கள் சேவை மையம் அருகே, புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட, ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 2023 --- 24 நிதி ஆண்டில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், 20 லட்சம் மதிப்பீட்டில், 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட, குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி துவக்கப்பட்டது.
ஆனால், கட்டுமான பணி துவக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், இதுவரை பணி முழுமை அடையாமல் மந்த நிலையில் உள்ளது.
இது குறித்து, துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை என, பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
எனவே, பாதியிலே நிற்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கட்டுமான பணியை விரைந்து முடிக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.