இன்று முக்கிய அறிவிப்பு முதல்வர் 'சஸ்பென்ஸ்'
சென்னை : இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், இன்று காலை 10:00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், இந்திய துணை கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும், 'இரும்பின் தொன்மை' என்ற நுாலை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
அத்துடன், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கை கொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு, அடிக்கல் நாட்டுகிறார். கீழடி இணையதளத்தை துவக்கி வைக்க
உள்ளார்.
இவ்விபரத்தை, அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவை, முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, 'நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது. வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள். மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
முதல்வர் அகழாய்வு தொடர்பாக, ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா அல்லது வேறு துறை தொடர்பான அறிவிப்பை வெளியிடுவாரா என, 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.
இன்று அண்ணாமலை அறிவிப்பு
மதுரை மேலுார், வல்லாளப்பட்டி, அரிட்டாப்பட்டி, கிடாரிப்பட்டி பகுதியில், டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்க்கும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன், டில்லி சென்ற தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தார்.
அதன்பிறகு பேட்டி அளித்த அண்ணாமலை, 'டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில், மத்திய அரசு தரப்பில் இருந்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்' என்றார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், 'இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும்' என அறிவித்திருப்பது, தமிழக மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.