ரயிலில் தீ பரவியதாக வதந்தியால்... கோர விபத்து! மற்றொரு ரயில் மோதி 12 பேர் பலி

ஜல்கான் : மஹாராஷ்டிராவில் விரைவு ரயிலில் தீப்பற்றியதாக வதந்தி பரவியதை அடுத்து, பயணியர் அச்சமடைந்து கீழே இறங்கியபோது, அடுத்த தண்டவாளத்தில் எதிர் திசையில் வந்த மற்றொரு விரைவு ரயில் மோதி, 12 பயணியர் உயிரிழந்தனர்.


உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இருந்து, மஹாராஷ்டிராவின் மும்பை நோக்கி புஷ்பக் விரைவு ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது.

மஹாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள மாஹேஜி மற்றும் பர்தாதே ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பச்சோரா என்ற இடத்தை நேற்று மாலை 5:00 மணிக்கு அடைந்தது.

அப்போது, அந்த ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி பரவியது. இதனால் ரயிலில், இருந்த பயணியர் அச்சமடைந்தனர்.

ரயிலின் அபாய சங்கிலியை, பயணி ஒருவர் பிடித்து இழுத்தார். உடனே ரயில் நின்றது. இதை தொடர்ந்து பயணியர் பலர் அவசர அவசரமாக தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள கீழே இறங்கி தப்பிக்க முயன்றனர்.

அப்போது அடுத்த தண்டவாளத்தின் எதிர்திசையில், கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து டில்லியை நோக்கி கர்நாடகா விரைவு ரயில் வந்தது.

மீட்பு பணி



இதை கவனிக்காமல் பயணியர் பலர் அந்த தண்டவாளத்தை கடந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரயில் அவர்கள் மீது மோதியது. மனித உடல்கள் நாலாபுறமும் சிதறின.

தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார், மீட்புக்குழு உதவியுடன் படுகாயமடைந்த பயணியரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் இதுவரை 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், பலரின் உடல் பாகங்கள் தனித்தனியாக கிடந்ததால், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை தற்போது தெரிவிக்க இயலாது என மீட்புக்குழு தெரிவித்தது.

சம்பவ இடத்திற்கு வந்த மாநில அமைச்சர் கிரீஷ் மகாஜன், ஐ.ஜி., காரலே ஆகியோர் ஆய்வு நடத்தி, மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினர்.

இதையடுத்து, விபத்து நிகழ்ந்த பகுதியில் இருந்து புஷ்பக் விரைவு ரயில் 15 நிமிடங்களில் புறப்பட்டது. இதேபோல் கர்நாடகா விரைவு ரயிலும் 20 நிமிடங்களுக்கு பின் புறப்பட்டு சென்றது.

இந்த விபத்து குறித்து அமைச்சர் கிரீஷ் மகாஜன் கூறுகையில், ''தவறான தகவல் பரவியதால், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், 12 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த பயணியர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், அனைவரும் அபாய கட்டத்தை கடந்துவிட்டனர்,'' என்றார்.

பிரேக்கால் தீப்பொறி



மத்திய ரயில்வே துறை உயரதிகாரிகள் கூறுகையில், 'சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் ரயில்வே பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக அவ்வழித்தடத்தில் இயக்கப்பட்ட புஷ்பக் ரயில் மெதுவாக இயக்க பிரேக் பிடிக்கப்பட்டது.

'அப்போது, சிறு தீப்பொறி ஏற்பட்டுள்ளது. உடனே, அது ரயிலில் தீப்பற்றியதாக வதந்தி பரவியது.

'இதன் காரணமாக, பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. எதிர்பாராதவிதமாக, எதிர்திசையில் கர்நாடகா விரைவு ரயில் வந்ததை அறியாமல் தண்டவாளத்தை கடந்ததால் இந்த விபத்து நேரிட்டது' என, குறிப்பிட்டனர்.



அமித் ஷா பேச்சு

இந்த விபத்து குறித்து மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் சமூக வலைதளத்தில் கூறுகையில், 'ரயில் விபத்தில் 12 பயணியர் இறந்தது துரதிர்ஷ்டவசமானது. அவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 'படுகாயமடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்' என, குறிப்பிட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை மாநில அரசு அறிவித்துள்ளது.இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் தேவேந்திர பட்னவிசிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது, அவர் ரயில் விபத்து குறித்து கேட்டறிந்ததுடன், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என்பதையும் எடுத்துரைத்தார். இதேபோல் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், விபத்தில் இறந்தவர்களுக்கு தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Advertisement