300 ஆண்டு பழமையான அனுமன் சிலை கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி:பர்கூர் அருகே, 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் மல்லப்பாடியில், 14ம் நுாற்றாண்டை சேர்ந்த, ராமசாமி, கிருஷ்ணசாமி கோவில்கள் உள்ளன. பழைய ரயில் பாதைக்கு அருகே மலையடிவாரத்தில் ராமசாமி கோவில் அருகே, அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து ஆய்வு நடத்தின. அங்கு, 18 அடி உயர பாறையில், 8 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஓய்வுபெற்ற அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறுகையில், ''300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கல்வெட்டில், இராயதிம்மநேயிடு என்னும் பெயர் கொண்ட ஆஞ்நேயரின் உருவத்தை, தேவப்ப ராயர் என்பவர் ஏற்படுத்தி, தொடர்ந்து பூஜை நடக்க தானமும் தந்துள்ளார். 'இதை காப்பாற்றுகிறவர், இறந்த பின் வைகுந்தத்துக்கு செல்வார்' என இக்கல்வெட்டு தெரிவிக்கிறது,'' என்றார்.

Advertisement