விளை நிலங்களில் தேங்கும் மழைநீர் காஞ்சி விவசாயிகள் கவலை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கம்மாளம்பூண்டி கிராமத்தில், பொதுப்பணித்துறை காட்டுப்பாட்டில் 120 ஏக்கர் பரப்பளவிலான பெரிய ஏரி உள்ளது.

இந்த நீரை பயன்படுத்தி, 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள, விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியில் இருந்து, விளைநிலங்களுக்கு நீரை கொண்டு செல்லும் கால்வாய்கள், தற்போது துார்ந்த நிலையிலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் உள்ளன.

கடந்த மாதம் பெஞ்சல் புயலின்போது, பெய்த மழையால் இப்பகுதியில் உள்ள 30 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களை வெள்ளநீர் சூழ்ந்து உள்ளது.

இந்த வெள்ளநீர் வடிந்து செல்ல போதிய கால்வாய் வசதி இல்லாததால், நவரை பருவ நடவு பணிகளை தொடங்க முடியாமல், பெரும்பாலான விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அவ்வப்போது, கடும் மழை பெய்யும் நேரங்களில், இப்பகுதியில் உள்ள விளை நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி வருவது வாடிக்கையாக உள்ளது.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நீர்வரத்து கால்வாய்களை துார்வருவது தொடர்பாக, துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, விளை நிலங்களில் மழை வெள்ளநீர் தேங்காதவாறு, நீர்வரத்து கால்வாய்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது :

கம்மாளம்பூண்டி பகுதியில் உள்ள, ஏரி கால்வாய்கள் அனைத்தும் துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், விளை நிலங்களுக்கு ஏரி நீரை முழுதுமாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை நேரங்களில், வெள்ளநீர் விளை நிலங்களை சூழ்ந்து கொள்வதால், விவசாயம் செய்ய முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறோம். எனவே, ஏரியில் இருந்து வரும் நீர்வரத்து கால்வாய்களை முறையாக தூர்வார வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement