கண்மாய் காப்போம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாயக்கர் குளம் கண்மாய், பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமலும், முறையாக பராமரிக்கப்படாமலும் மண்மேவி காணாமல் போகும் அபாயநிலையில் உள்ளது.
கோயில் நகரமான ஸ்ரீவில்லிபுத்துாரை சுற்றி பெரியகுளம், மொட்டபெத்தான், வேப்பங்குளம், தட்டாங்குளம், குருக்கள் குளம், நாயக்கர்குளம், வடமலைகுறிச்சி, செங்குளம், ராஜகுல ராமப்பேரி, சோழங்குளம், அத்திகுளம் என பல கண்மாய்கள் உள்ளது.
இவற்றின் மூலம் நகரின் நீர் ஆதாரம் காப்பாற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையினால் ஏற்படும் நீர்வரத்து மம்சாபுரம் பகுதி கண்மாய்கள் வழியாக பெரியகுளத்திற்கும், மொட்ட பத்தான் கண்மாய் வழியாகவும், திருவண்ணாமலை மலையடி வாரத்தில் பெய்து வெளியேறும் மழை நீர் வேப்பங்குளம், தட்டாங்குளம், குருக்கள்குளம், நாயக்கர் குளத்திற்கு வந்து பின்னர் வடமலைக்குறிச்சி கண்மாய்க்கு வரும் வகையில் கால்வாய்களும் பாசன நிலங்களும் இருந்தது.
இதன்படி வடமலைகுறிச்சி கண்மாய்க்கு மொட்ட பெத்தான் வழியாகவும், பூவாணி கூட்டுறவு மில் ஓடை வழியாகவும், நாயக்கர் குளம் கண்மாயிலிருந்தும் தண்ணீர் வரும் வகையில் நீர்வரத்து பாதைகள் இருந்தது.
இதில் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை திருவண்ணாமலை பகுதியில் பெய்யும் மழை நீர் வேப்பங்குளம் தட்டாங்குளம் வழியாக நாயக்கர் குளத்திற்கு தண்ணீர் வரத்து இருந்தது.
ஆனால், விவசாயத் தொழில் நசிவின் காரணமாக விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறிய நிலையில் நாயக்கர் குளம் கண்மாய் பாசன நிலங்கள்
தற்போது வீடுகளாக மாறிவிட்டன.
இதனால் நாயக்கர் குளம் கண்மாய் நீர்வரத்து பாதைகளும், நீர் பிடிப்பு பகுதிகளும் முறையாக பராமரிக்காமல் கழிவுகள் தேங்கியும், மண் மேவியும், சமதளமாகி காணாமல் போகும் நிலை உருவாகி வருகிறது.
இதனால் பல ஆண்டுகளாக இந்த கண்மாய்க்கு தண்ணீர் வராமல் வடமலைகுறிச்சி கண்மாயும் பல ஆண்டுகளாக நிரம்பி மறுகால் விழவில்லை.
இதனால் வடமலைகுறிச்சி கண்மாயும் தண்ணீர் இன்றி வறண்டு வருகிறது.
எனவே, நாயக்கர் குளம் கண்மாயை முழு அளவில் தூர்வாரியும், நீர்வரத்து பாதைகளை சரி செய்தும் கரையை பலப்படுத்தினால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.
வடமலைகுறிச்சி கண்மாய்க்கும் நீர் வரத்து ஏற்படும். இதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கண்மாயை காப்பது அவசியமாகும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
நீர்வரத்து பாதைகளை சரிசெய்ய வேண்டும்
செல்வகுமார், விவசாயி: மொட்டபெத்தான், நாயக்கர் குளம், பூவாணி மில் ஓடை வழியாக வடமலைக்குறிச்சி கண்மாய்க்கு நீர்வரத்து பாதைகள் உள்ளது.
இப் பாதைகளை தூர்வாரி சரி செய்தால் வடமலைக்குறிச்சி கண்மாய் நிரம்பும் வகையில் தண்ணீர் வரும். நாயக்கர் குளத்தில் இருந்து வடமலைகுறிச்சிக்கு தண்ணீர் வரும் நீர்வரத்து பாதைகள், கண்ணாத்து கால்வாய்களை சீரமைத்து தண்ணீர் வரும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
-நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்
-கோவிந்தராஜ், விவசாயி: நகரை சுற்றி பல கண்மாய்கள் உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் அனைத்து கண்மாய்களுக்கும் நீர் வரத்து ஏற்படும்.
தற்போது நாயக்கர் குளம் கண்மாயை தூர்வாரி நீர்வரத்து பாதைகளை சீரமைத்து, கரைகளை பலப்படுத்தினால் நகரில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.
சுற்றியுள்ள வீடுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. வடமலைகுறிச்சியும் நிரம்பும் நிலை உருவாகும்.