விலை இல்லாததால் கரும்பு அறுவடை செய்யாத விவசாயிகள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் கரும்புகள் விலை போகாததால் அறுவடை செய்யாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

அருப்புக்கோட்டை அருகே புலியூரான், செம்பட்டி, இலங்கிபட்டி, வடபாலை, தென்பாலை பகுதியில் கரும்பு விவசாயம் நடந்து வருகிறது.

புலியூரான் கரும்புகள் ஏக்கருக்கு 1 லட்சம் வரை செலவழித்து, 10 மாதங்கள் உழைத்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு கரும்புகள் நல்ல விலை போகும், அரசும் கொள்முதல் செய்யும் என நினைத்த விவசாயிகளுக்கு கரும்புகள் விலை போகாததால், இந்த பொங்கல் பண்டிகை விவசாயிகளுக்கு கசப்பாக மாறிவிட்டது.

இதனால் பல ஏக்கர் கரும்புகள் அறுவடை செய்யாமலேயே உள்ளது.

ஏக்கருக்கு லட்சக்கணக்கில் செலவழித்தும் கரும்புகள் விலை போகவில்லையே எனவும், அரசும் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து புலியூரான் கரும்பு விவசாயிகள்: ஏக்கருக்கு லட்சக்கணக்கில் செலவழித்து கரும்புகளை பயிரிட்டுள்ளோம். இடையில் பலத்த காற்றில் கரும்புகள் சாய்ந்தன. மீதமுள்ள கரும்புகளாவது நல்ல விலை போகும், அரசும் கொள்முதல் செய்யும் என எதிர்பார்த்த நிலையில், கரும்புகள் விலை போகவில்லை.

அரசும் பொங்கலுக்கு கொள்முதல் செய்யாமல் விட்டதால் எங்களுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கரும்பு விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், என கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement