மினி குடிநீர் டேங்கர் வேனை திருடி விற்க முயன்ற மூவர் கைது
காரியாபட்டி: காரியாபட்டியில் மினி குடிநீர் டேங்கர் வேனை திருடி விற்க முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
காரியாபட்டியை சேர்ந்தவர் லிங்குச் சாமி. இவர் கள்ளிக்குடி ரோட்டில் மினரல் பிளான்டில் மினி குடிநீர் டேங்கர் வேனை நிறுத்தி வைத்திருந்தார்.
சில தினங்களுக்கு முன் ஒரு வேன் திருட்டு போனது. காரியாபட்டி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் கள்ளிக்குடி ரோட்டில் நின்றிருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் ஓடினார்.
அவரை பிடித்து விசாரித்ததில், காரியாபட்டியை சேர்ந்த சக்தி முருகன், அங்குள்ள கோழி கடையில் டிரைவராக வேலை பார்த்து வருவதாக தெரிவித்தார்.
தீவிர விசாரணையில், அதிக திறன் கொண்ட டூவீலர் வாங்க பணம் இல்லாததால் திருடி வாங்க, நண்பர்களான அஜய், அருண்பாண்டியனுடன் திட்டமிட்டனர்.
அப்போது தான் கள்ளிக்குடி ரோட்டில் நிறுத்தி இருந்த மினி குடிநீர் டேங்கர் வேனை திருடி கல்லுப்பட்டி கண்மாய் பகுதியில் நிறுத்திவிட்டு 2 நாட்கள் கழித்து உதிரி பாகங்களாக பிரித்து விற்பனை செய்ய முடிவு செய்திருந்ததாக தெரிவித்தார்.
வாகனத்தை கைப்பற்றி மூன்று பேரையும் காரியாபட்டி போலீசார் கைது செய்தனர்.