குண்டாற்றின் குறுக்கே பிசிண்டியில் தடுப்பணை கட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
காரியாபட்டி: காரியாபட்டி பிசிண்டி அருகே குண்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அதிகாரிகள் பாராமுகமாக இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
காரியாபட்டி கே. கரிசல்குளம், வக்கணாங்குண்டு, அல்லிக்குளம், சித்துமூன்றடைப்பு, கழுவனச்சேரி உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களுக்கு போதிய நீர் வரத்து இல்லாததால் கண்மாய் வறண்டு விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நீர் வரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து பிசிண்டி அருகே குண்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பட்சத்தில் பல்வேறு கண்மாய்களுக்கு நீர்வரத்துக்கு வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அப்பகுதியில் மணல் மூடைகளை அடுக்கி வைத்து, வக்கணாங்குண்டு கண்மாய்க்கு இளைஞர்கள் தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்வர்.
கண்மாய் நிறைந்து செழிப்பாக இருக்கும். இதனை நிரந்தரமாக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
அதிகாரிகள் ஆய்வு செய்து, தடுப்பணை கட்ட திட்ட மதிப்பீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக விவசாயிகளிடத்தில் தெரிவித்தனர்.
இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் பாரா முகமாக இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.
சமீபத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.
இதனை தடுத்து வரத்து கால்வாய் வழியாக திருப்பி விடும் பட்சத்தில் பல்வேறு கண்மாய்களுக்கு தண்ணீர் சென்று விவசாயம் செழிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் இத்திட்டத்தை கிடப்பில் போடாமல் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.