வில்லியனுார் கொம்யூனில் 26ம் தேதி கிராம சபை கூட்டம்
புதுச்சேரி: வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்தில் நடக்கும் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க, பொதுமக்களுக்கு ஆணையர் ரமேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வில்லியனுார், கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 26ம் தேதி கிராம சபைக்கூட்டம் காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
இந்த கூட்டம் சேதராப்பட்டு, தொண்டமாநத்தம், பிள்ளையார்குப்பம், கூடப்பாக்கம், பொறையூர் உள்ளிட்ட, 24 கிராம பஞ்சாயத்துகளில் நடைபெறுகிறது.
இதில் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து தீர்மானங்களாக நிறைவேற்றி நடைமுறைப்படுத்த ஆவணம் செய்யப்படும்.
அதை சம்மந்தப்பட்ட மின்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய், போலீஸ், பொதுப்பணி, கல்வி, சமூக நலம், ஆதி திராவிடர் நலம் உள்ளிட்ட துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். ஆக்கப்பூர்வமான செயல் திட்டத்தை நிறைவேற்ற பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.