2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது; இறுதி பட்டியலில் இடம் பிடித்தது இந்திய குறும்படம்!
லாஸ் ஏஞ்சலஸ்: 2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை இறுதி பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 'அனுஜா' என்ற குறும்படம் இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வெளியான சிறப்பான படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் மிகவும் பிரபலம். திரையுலகில் இருக்கும் அனைவருக்குமே இந்த விருதை பெறுவது தான் கனவாக இருக்கும். இந்த ஆண்டு மார்ச் மாதம், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சாமுவேல் கோல்ட்வின் தியேட்டரில் வழங்கப்படவிருக்கும் 97வது அகாடமி விருதுகளை கோனன் ஓ பிரையன் தொகுத்து வழங்குவார்.
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பட்டியலில் படங்கள், நடிகர், நடிகைகள் என அனைத்து லிஸ்ட்டும் வரிசையாக வெளியிடப்பட்டு வருகிறது. இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட கங்குவா, Girls Will Be Girls, All We Imagine As Light, ஆடுஜீவிதம், வீர் சாவர்க்கர் படங்களில் எதுவும் தேர்வாகவில்லை. அதே நேரத்தில், இந்தியாவைச் சேர்ந்த 'அனுஜா' என்ற குறும்படம் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்த படம் தயாரிப்பாளர்களில் மிண்டி கலிங் மற்றும் ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா கபூர் ஆகியோர் அடங்குவர். பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவும் அனுஜா குறும்படத்தின் தயாரிப்பு குழுவில் இடம் பிடித்துள்ளார். இந்த குறும்படத்தில், 9 வயது சிறுமி குழந்தை தொழிலாளராக பணிபுரிந்து பட்ட இன்னல்கள் குறித்து தெள்ள தெளிவாக பேசப்பட்டு உள்ளது.
லைவ் ஆக்ஷன் குறும்பட பிரிவில் 180 குறும்படங்களுடன் போட்டியிட்டு, இறுதி பட்டியலில் 'அனுஜா' குறும்படம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவின் 'The Elephant Whisperers' குறும்படம் ஆஸ்கர் விருது வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.