நீலகிரி மாவட்ட மக்களை அச்சுறுத்திய புல்லட் யானை; இரவோடு இரவாக கோதையாறு பயணம்!
நீலகிரி: நீலகிரி மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த புல்லட் யானை, கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு அடர் வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.
பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், 35க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன. அதில், 'புல்லட்' என்று அழைக்கப்படும் யானை தொடர்ந்து குடியிருப்புகளை இடித்து அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை துாக்கி சென்று வந்தது. 35க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து, மனிதர்களையும் தாக்கி வந்தது புல்லட் யானை. வனத்துறையினர் இரண்டு கும்கி யானைகள் உதவியுடன், புல்லட் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கும்கி யானைகளை பார்த்தவுடன், புல்லட் யானை புதருக்குள் பதுங்கியது. வேறு வழியில்லாத நிலையில் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். மூன்று நாள் முயற்சியின் முடிவில் யானை பிடிக்கப்பட்டது. முதலில் பொள்ளாச்சி அருகே டாப்ஸ்லிப் கொண்டு செல்லப்பட்ட யானையை, பிறகு தென்கோடி மாவட்ட வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சரணாலயத்திற்கு புல்லட் யானையை வனத்துறையினர் லாரியில் கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி கோதையாறு கொண்டு செல்லப்பட்ட யானை அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் துணை இயக்குனர் இளையராஜா மற்றும் களக்காடு வன கோட்டத்தின் இயக்குனர்கள் நேரடி பார்வையில் யானை கோதையாறு வனத்தில் விடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கேரளா மற்றும் தமிழகம் பகுதிகளில் அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்டு பின்பு இதே கோதையாறு வன பகுதியில் விடப்பட்டுள்ளது.