விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.6 கோடி இழப்பு: அதிகாரிகள் அலட்சியத்தால் பறிபோன அவலம்
புதுச்சேரி: வேளாண் அதிகாரிகளின் அலட்சியத்தால், விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நெல் விற்பனை மானியம்ரூ.6 கோடி வேறு திட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை வியாபாரிகள், கிலோ ரூ.17 வீதம் கொள்முதல் செய்கின்றனர்.
அதே நேரத்தில் இந்திய உணவுக்கழகம் கிலோ ரூ.24க்கு கொள்முதல் செய்கிறது. ஆனால், நெல் சுத்தமாகவம், ஈரப்பதம் 16 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
மாநிலத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை, காய வைக்க உலர் கல வசதி இல்லை.
இதனால், இந்திய உணவுக் கழகம் நிர்ணயித்துள்ள அளவிற்கு நெல்லை காய வைக்க முடியாததால், தங்களை தேடிவரும் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் குவிண்டாலுக்கு ரூ.700 நஷ்டமடைவதை அறிந்த முதல்வர் ரங்கசாமி, கடந்த பட்ஜெட்டில் விவசாயிகள் இந்திய உணவுக் கழகத்திற்கு விற்கும் நெல்லிற்கு கிலோவிற்கு ரூ.2 மானியம் வழங்கப்படும் என்ற திட்டத்தை அறிவித்ததோடு, இதற்காக காரைக்கால் பிராந்தியத்தில் 20,000 டன் நெல் கொள்முதல் செய்யும் இலக்கில் ரூ.4 கோடி யும், புதுச்சேரி பிராந்தியத்தில் 10,000 டன் நெல் கொள்முதல் செய்திட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டார்.
முதல்வரின் இந்த அறிவிப்பை செயல்படுத்த அதிகாரிகள், புதிய திட்டத்திற்கான வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து திட்டக்குழுமம் மற்றும் நிதித்துறையின் ஒப்புதல் பெற்று, முதல்வர் மற்றும் துறை அமைச்சரின் அனுமதி பெற்று, கவர்னரின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், வேளாண் அதிகாரிகள், விவசாயிகளுக்காக முதல்வர் அறிவித்த மானிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங்க கோப்பை தயார் செய்யாததால், ஒதுக்கீடு செய்த நிதி செலவிடப்படாமல் இருந்தது.
இதனை அறிந்த நிதித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் வெளியிட்ட திருத்திய வரவு-செலவு மதிப்பீட்டில், விவசாயிகளுக்கு நெல் விற்பனை மானியத்திற்காக ஒதுக்கீடு செய்த ரூ.6 கோடியை வேறு திட்டங்களுக்கு மாற்றம் செய்துவிட்டு, திட்டம் நடைமுறையில் உள்ளதாக கணக்கு காட்ட புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களுக்கு தலா ரூ.1,000 மட்டும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.
வேளாண் துறை அதிகாரிகளின் அலட்சியத்தினால், நெல் குவிண்டாலுக்கு கூடுதலாக கிடைக்க வேண்டிய ரூ.900 பறிபோயுள்ளதால், விவசாயிகள்கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.