எல்லையோர மதுக்கடைகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

பாகூர்: பாகூர் எல்லையோர பகுதியில் உள்ள மதுக்கடைகளை அகற்றக்கோரி, மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாகூர் தாலுகா அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் கலியன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், பெருமாள் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், பாகூர் கொம்யூன் எல்லையோர பகுதிகளான சோரியாங்குப்பம், குருவிநத்தம், மணமேடு, முள்ளோடை, கரையாம்புத்துார் உள்ளிட்ட இடங்களில் உள்ள மதுக் கடைகளால் சட்டம் ஒழுங்கு சீரழிகிறது. சமூக குற்றங்களை ஏற்படுத்தும் அனைத்து மது கடைகளையும் உடனடியாக மூட வேண்டும்.

புதிய மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என, வலியுறுத்தினர். பின், தாசில்தார் கோபாலக்கிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Advertisement