6 மாதங்கள் போயே போச்சு! தேர்வு முடிவுகளை வெளியிடாத ஆசிரியர் தேர்வு வாரியம்
சென்னை: தமிழகத்தில் 1,768 ஆசிரியர் காலி பணிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவ்வப்போது அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 1,768 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், அதற்கான தேர்வையும் நடத்தி முடித்துள்ளது. கிட்டத்தட்ட 26,000 பேர் இந்த தேர்வை எழுதி இருக்கின்றனர்.
தேர்வு நடத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையில் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறைந்தபட்சம் உத்தேச விடைக்குறிப்புகளை கூட வெளியிடாமல் இருப்பதாக தேர்வர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தேர்வு எழுதியவர்கள் கூறி உள்ளதாவது;
பொதுவாக ஆசிரியர் தேர்வு வாரியம் எப்போது எல்லாம் தேர்வு நடத்துகிறதோ, அப்போது எல்லாம் அதன் முடிவுகளும் விரைவில் வெளியாகி விடும். ஆனால் இந்த முறை தேர்வு நடத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்துவிட்டது. இன்னமும் முடிவுகள் வெளியாகவில்லை.
தேர்வு முடிந்த 2 வாரங்களில் உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்படும். இம்முறை அந்த விடைகளை கூட ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை. இது குறித்து இலவச தொலைபேசி எண் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தை தொடர்பு கொண்டு கேட்டோம். கூடிய விரைவில் வெளியிடுவதாக அவர்கள் பதில் கூறி இருக்கின்றனர். ஆனால் எப்போது என்றுதான் தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.