மனைவியை விட்டு பிரிகிறார் சேவாக்?
புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி விவாகரத்து பெற இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடியான தொடக்க வீரராக இருந்தவர் விரேந்திர சேவாக், கடந்த 2015ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இவர், 2004ல் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யவிர் மற்றம் வேதாந்த் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
இதனிடையே, சேவாக்கும், ஆர்த்தியும் கடந்த சில மாதங்களாக தனித்தனியே வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, எந்த நிகழ்ச்சியிலும் இருவரும் சேர்ந்து பங்கேற்காதது, சமூக வலைதளங்களில் கூட இருவரும் இணைந்து இருக்கும் போட்டோக்களை பதிவேற்றாதது உள்ளிட்ட காரணங்களால், இருவரும் விவகாரத்து முடிவுக்கு வந்து விட்டதாக தகவல் வெளியாகி வந்தது.
குறிப்பாக, தீபாவளி பண்டிகையின் போது கூட, சேவாக் பகிர்ந்த போட்டோக்களில் அவரது மனைவி இடம்பெறவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் சேவாக்கும், அவரது மனைவி ஆர்த்தியும் ஒருவரை ஒருவர் பாலோ செய்வதை நிறுத்தியுள்ளனர். இதனால், இருவரும் பிரிவது உறுதியாகிவிட்டதாக வலுவான பேச்சுக்கள் எழுந்துள்ளன. சமீப காலமாக கிரிக்கெட் வீரர்களின் விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கும் அந்தப் பட்டியலில் சேர்ந்து விடுவாரோ என்று ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.