தமிழக கபடி வீராங்கனைகள் மீது சரமாரி தாக்குதல்; பஞ்சாபில் அதிர்ச்சி

15


சண்டிகர்: பஞ்சாபில் நடந்த பல்கலைகளுக்கு இடையிலான கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பல்கலைகளுக்கு இடையிலான கபடி போட்டி பஞ்சாப்பில் நடைபெற்று வருகிறது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த பாரதியார் பல்கலை, அன்னை தெரசா பல்கலை மற்றும் அழகப்பா பல்கலையைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.


இன்று அன்னை தெரசா பல்கலைக்கும், பீகாரின் தர்பங்கா பல்கலைக்கும் இடையே போட்டி நடைபெற்றது. அப்போது, பவுல் பிளே குறித்து இரு அணி வீராங்கனைகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நடுவரிடம் புகார் அளித்த தமிழக வீராங்கனையை பீகார் வீராங்கனை தாக்கியுள்ளார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், இரு அணியினரும் மாறிமாறி தாக்கிக் கொண்டனர். பீகார் வீராங்கனைகள் அங்கிருந்து நாற்காலிகளை எடுத்து தமிழக வீராங்கனைகள் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில் தமிழக வீராங்கனைகள் படுகாயம் அடைந்தனர். மேலும், தமிழக அணியின் பயிற்சியாளரை போலீசார் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் மேக்நாத் ரெட்டி கூறுகையில், "இந்த சம்பவம் குறித்து பஞ்சாபில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு பேசினேன். பயிற்சியாளர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை கைது ஏதும் செய்யவில்லை. தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்,'' என்றார்.

Advertisement