டாஸ்மாக் ஊழியர் ஸ்டிரைக்; முறியடிக்க அரசு தீவிரம்!
மதுரை: பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஜன.,26 முதல் ஸ்டிரைக் நடத்துவதாக அறிவித்துள்ளனர். அதை முறியடிக்க டாஸ்மாக் நிர்வாகம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
அரசு துறையில் தொடர்ந்து, 10 ஆண்டுகள் பணிபுரிந்தால், அவர்களை பணிநிரந்தரம் செய்வதாக, தேர்தல் நேரத்தில், தி.மு.க., வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னையில் வரும், 26ல் டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கோதண்டம் கூறினார்.
மேலும் அவர், 'வரும் 20ல் பேச்சுக்கு வருமாறு அதிகாரிகள் அழைத்துள்ளனர். இந்த பேச்சில் உடன்பாடு ஏற்படாவிட்டால், 27ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை மூடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்' என்றார். இந்தப் போராட்டத்தை முறியடிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் டாஸ்மாக் ஊழியர் போராட்டத்தை முறியடிக்க டாஸ்மாக் நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவுகள்:
* மதுபான கடை சாவி மாவட்ட மேலாளரின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
* மாவட்ட வாரியாக கட்டுப்பாட்டு அறை, வட்ட வாரியான மண்டல அலுவலர்கள், பகுதி வாரியாக தணிக்கை அலுவலர்கள் நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும்.
* வரும் ஜனவரி 27ம் தேதி முதல் கடைப் பணியாளர்கள் பணிக்கு வராதவர்கள் விபர அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
* குறைந்தது 2 கடைப் பணியாளர்கள் கடையினை திறந்து வைத்து, கடை விற்பனை பணி 100 சதவீதம் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.