கோபத்தில் கொந்தளித்தார் எம்.எல்.ஏ.,; சமாதானம் செய்த அதிகாரிகள்; காரைக்குடியில் கூத்து

4

காரைக்குடி: பொதுக்கணக்கு குழுவுடன் ஆய்வுக்கு வந்த இடத்தில், தன்னை யாரும் வரவேற்காததால் காஞ்சிபுரம் தி.மு.க., எம்.எல்.ஏ., எழிலரசன் கோபம் அடைந்தார். அவரை காங்., எம்.எல்.ஏ., செல்வப் பெருந்தகை மற்றும் அதிகாரிகள் உட்பட அனைவரும் சமாதானம் செய்தனர்.


தமிழக சட்டசபை பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் உறுப்பினர்கள் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டனர். காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சொந்த நிதியில் கட்டப்பட்டு முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட வளர் தமிழ் நூலகத்தை செல்வப்பெருந்தகை ஆய்வு செய்தார்.



பல்கலை துணைவேந்தர் ரவி, கலெக்டர் ஆஷா அஜித், மாங்குடி எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். அப்போது காஞ்சிபுரம் தி.மு.க., எம்.எல்.ஏ., எழிலரசனை யாரும் முக்கியத்துவம் கொடுத்து வரவேற்கவில்லை. இதனால் கோபித்துக் கொண்டு எம்.எல்.ஏ., எழிலரசன் வெளியில் நின்று விட்டார்.


இதையறிந்ததும், அவரை காங்., எம்.எல்.ஏ., செல்வப் பெருந்தகை மற்றும் அதிகாரிகள் சென்று சமாதானம் செய்தனர். 'அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு இங்கு வந்தால் அதற்கான உரிய மரியாதை வழங்க வேண்டும்' என்று தி.மு.க., எம்.எல்.ஏ., அதிகாரிகளை கடிந்து கொண்டார். எம்.எல்.ஏ.,வின் திடீர் கொந்தளிப்பால் அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.

Advertisement