குஜராத்தில் 2வது நாளாக வெடிகுண்டு மிரட்டல்; பள்ளிகளுக்கு தொடரும் அச்சுறுத்தல்
வதோதரா: குஜராத்தில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பள்ளிகள், கல்லூரிகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக, தலைநகர் டில்லியில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் வருவதும், அதன்பிறகு நடத்தப்பட்ட சோதனையில், அது புரளி என்பதும் தெரிய வந்தது.
மேலும், பள்ளிகளுக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த பள்ளி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், குஜராத்தின் வதோதராவில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 4 மணியளவில் வந்த இந்த மிரட்டல் இமெயிலை தொடர்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும், பள்ளி வளாகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், இந்த மெயில் அனுப்பியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்றும் குஜராத்தில் பல்வேறு பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.