திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.54 கோடி வரி பாக்கி: 15 பேருக்கு 'மெமோ': தபால் துறையோடு இணைந்த மாநகராட்சி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சிக்கு மக்கள் செலுத்த வேண்டிய ரூ.54 கோடி வரியை முறையாக வசூலிக்காத 15 வருவாய் துறை அலுவலர்களுக்கு'மெமோ'வழங்கப்பட்டுள்ளது. வரிபாக்கி செலுத்தாதவர்களுக்கு நினைவு கூர்வதற்காக தபால் கார்டு,
அலைபேசியில் எஸ்.எம்.எஸ். டிமேன்ட் நோட்டீஸ் அனுப்பவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பகுதிகளில் வாழும் மக்கள் வீட்டு வரி, சொத்து வரி, பாதாள சாக்கடை
கட்டணம், குடிநீர் கட்டணம், கடை வாடகைகள் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான வரிகளை மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு
செலுத்த வேண்டும். அந்த வரி மூலம் மாநகராட்சி அலுவலர்களுக்கு சம்பளம் போடுவது, அரசின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துவது
உள்ளிட்ட செயல்களுக்காக பயன்படுத்துகின்றனர். இதை மாதாமாதம் மாநகராட்சியில் வாழும் மக்கள் அலுவலகத்திற்கு வந்து செலுத்த
வேண்டும். அல்லது ஆன்லைன் மூலமாகவும் செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்த ஆண்டிற்கான கணக்கு மார்ச் மாதம் முடிய உள்ள நிலையில் மக்கள், தனியார் நிறுவனங்கள், வாடகை கடைக்கார்கள் என ஏராளமானோர் முறையாக வரியை செலுத்தவில்லை. இதனால் சொத்துவரி ரூ.21 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.14 கோடி, வாடகையாக ரூ.8.78 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ.3 கோடி என ரூ.54 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளது. இதை வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் 16 குழுக்களை நியமித்து விரைந்து பாக்கி தொகையை வசூலிக்க உத்தரவிட்டது. அதன்படி வருவாய் துறை அலுவலர்கள்
மும்மரமாக வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் வரி வசூல் முழுமையாக நடக்கவில்லை. விசாரணையில் சில
வருவாய்த்துறை அலுவலர்கள் சுணக்கமாக இருந்தது தெரிந்தது. தொடர்ந்து முறையாக வரி வசூலிக்காத வருவாய்த்துறை அலுவலர்கள்
15 பேருக்கு மாநகராட்சி நிர்வாகம் 'மெமோ'வழங்கியது.
இன்னும் வரி வசூலை அதிகரிக்க மாநகராட்சி தபால் துறையோடு இணைந்து வரி செலுத்தாதவர்களின் முகவரிகளுக்கு தபால் கார்டு, அலைபேசிகளுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் டிமேன்ட் நோட்டிஸ் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.